விளையாட்டு
வெற்றிப் பாதைக்கு திரும்புமா தமிழ் தலைவாஸ்? உ.பி யோதாசுடன் இன்று மோதல்
வெற்றிப் பாதைக்கு திரும்புமா தமிழ் தலைவாஸ்? உ.பி யோதாசுடன் இன்று மோதல்
12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் உள்அரங்க மைதானத்தில் நடைபெற்ற 46-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் உபி யோதாஸ் அணிகள் மோதுகின்றன.நடப்பு தொடரில் இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள அர்ஜுன் தேஷ்வால் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி 3-ல், 4-ல் தோல்வி என புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், இதுவரை ஆடியுள்ள 6 போட்டிகளில் 2-ல் வெற்றி, 4-ல் தோல்வி என சுமித் சங்வான் தலைமையிலான உ.பி. யோதாஸ் அணி 10-வது இடத்தில் இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற உ.பி யோதாஸ் அணி, தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளது. பெங்கால் வாரியர்சுக்கு எதிரான கடைசி போட்டியில் 41-37 என வெறும் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மறுபுறம், தமிழ் தலைவாஸ் அணி முதல் போட்டியில் வெற்றி, அதன் பிறகு 2 தோல்வி, பின்னர் 2-ல் வெற்றி அதன் பிறகு 2-ல் தோல்வி என ஏறுமுகத்தையும் இறங்குமுகத்தையும் சந்தித்து வருகிறது. ஹரியானா ஸ்டீலர்சுக்கு எதிரான கடைசி போட்டியில் 38-36 என 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். ரைடிங்கில் கேப்டன் அர்ஜுன் தேஷ்வாலை மலைபோல் நம்பியிருக்கும் அந்த அணி ஒரு சேர அனைத்து பிரிவிலும் கவனம் செலுத்தி ஆட வேண்டும். தொடர் தோல்விகளால் துவண்டு வரும் அந்த அணிக்கு உத்வேகம் கிடைக்க இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. நேருக்கு நேர் புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் மற்றும் உபி யோதாஸ் அணிகள் அணிகள் இதுவரை 17 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 8 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் வென்றுள்ளது. அதேநேரத்தில் உ.பி யோதாஸ் 6 போட்டிளில் வென்றுள்ளது. 3 போட்டிகள் டிராவில் முடிந்தது. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் 4-ல் வென்றுள்ளது.