இந்தியா

புதுச்சேரியில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 27 பேர் பாதிப்பு: அரசுககு எதிர்கட்சி தலைவர் கண்டனம்

Published

on

புதுச்சேரியில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 27 பேர் பாதிப்பு: அரசுககு எதிர்கட்சி தலைவர் கண்டனம்

புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர் தொடர்ந்து பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்லம் தலைமையில் கண்காணிப்பு பொறியாளர்கள் சந்திரமூர்த்தி, சந்திரமோகன், குடிநீர் பிரிவு செயற்பொறியாளர் வாசு, உதவிப் பொறியாளர் அன்பரசு, இளநிலைப் பொறியாளர் வெங்கடேசன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவை சந்தித்து பேசினார்கள்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இரா. சிவா அவர்கள், நெல்லித்தோப்பு மற்றும் நகரப் பகுதியில் மீண்டும் கழிவுநீர் கலந்த சுகாதாரமற்ற குடிநீரை குடித்து அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் 19 பேரும், ஆண்கள் வார்டில் 8 பேர் என மொத்தம்  27 பேர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெருத்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் இதுபோன்ற சுகாதாரமற்ற குடிநீர் அருந்திய 50–க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும், அதில் அப்பாவி மக்கள் 7–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவமும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் அரசு மெத்தனமாக இருப்பதும், உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு நிவராணம் வழங்காமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கது ஆகும். இந்நிலையில் இன்று நெல்லித்தோப்பு தொகுதிக்கு உட்பட்ட கான்வென்ட் வீதி, பள்ளிவாசல் வீதி, ராஜா நகர், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வாந்தி, பேதி, மயக்கம் காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியவர்களுக்கு கிட்னி பாதிப்பு ஏற்படுவதாகவும் செய்திகள் பரவுவதால் மக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர். இதன் தீவிரத்தை அரசு இன்னும் உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது. குடிநீருடன் கழிவுநீர் கலப்பதை பகுதி பகுதியாக ஆய்வு செய்து எங்கு கழிவுநீர் கலக்கிறது என்பதை கண்டுபிடித்து போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும். இதுபோன்ற அசாதாரண சூழல் இருக்கின்றபோது அரசு மெத்தனமாக இருக்காமல் சுகாதாரத்துறை, ஜிப்மர் மருத்துவமனையோடு இணைந்து இதுபோன்ற சுகாதார பிரச்சனை ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிய சிறப்பு குழு அமைக்க வேண்டும். எதனால் குடிநீரின் தன்மை மாறுபடுகிறது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அப்போது தான் மக்களுக்கு இருக்கும் அச்சம் நீங்கும். தண்ணீரில் கழிவுநீர் கலப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் மூலக்காரணத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.  நலவழித்துறையும் இவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும். புதுச்சேரியில் மீண்டும் சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் பாதிக்காத வகையில் அரசு இயந்திரம் தீவிரமாக செயல்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version