இந்தியா
“மக்களுக்கு குடிநீர் கொடுக்க முடியாத அரசு எதற்கு?”: கொந்தளித்த நாராயணசாமி- புதுவையில் குண்டாக ராஜினாமா செய்ய கோரிக்கை
“மக்களுக்கு குடிநீர் கொடுக்க முடியாத அரசு எதற்கு?”: கொந்தளித்த நாராயணசாமி- புதுவையில் குண்டாக ராஜினாமா செய்ய கோரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூன்று பேர் உயிரிழந்தனர். இதனை கண்டித்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆளுநர் மாளிகை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய நாராயணசாமி, மக்களுக்கு சுத்தமான குடிநீர் கூட வழங்க முடியாத ஆட்சியாளர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்தார்.கழிவுநீர் கலந்த குடிநீர்:புதுவையின் உருளையன்பேட்டை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலந்தது. இந்த அசுத்தமான நீரை குடித்த பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பலர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் மேலும் மூன்று பேர் இறந்துள்ளதாக குற்றம் சாட்டினர். பொதுப்பணித்துறை ஆய்வு செய்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தது.இருப்பினும், இந்த பிரச்சனை ஓயவில்லை. திங்கட்கிழமை (செப். 22) நெல்லித்தோப்பு தொகுதியிலும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து, 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.ஆளுநர் மாளிகை முன் உண்ணாவிரதம்!இந்த தொடர் சம்பவங்களால் ஆத்திரமடைந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து ஆளுநர் மாளிகையின் நுழைவாயில் முன்பு திடீரென உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவருடன் முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், மகிளா காங்கிரஸ் தலைவி நிஷா, பொதுச்செயலாளர் எஸ்.எம்.ஏ. கருணாநிதி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் செய்தி பரவியதும், பல இடங்களில் இருந்தும் காங்கிரசார் ஆளுநர் மாளிகையை நோக்கி வரத் தொடங்கினர். இதனால் போலீசார் ஆளுநர் மாளிகையின் இருபுறமும் தடுப்புகளை அமைத்து யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. காங்கிரசாருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, “மக்களுக்கு சுத்தமான குடிநீர் கூட கொடுக்க முடியாத இந்த அரசு எதற்கு?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மேலும், “இந்த ஆட்சியாளர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும். இந்த குடிநீர் பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால், மாநிலம் முழுவதும் மாபெரும் போராட்டம் வெடிக்கும்” என்று எச்சரித்தார்.செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி