வணிகம்
ஏ.டி.எம்-ல் பி.எஃப் பணம் எடுக்கும் வசதி எப்போது? இ.பி.எஃ.ஓ 3.0-ல் காத்திருக்கும் மாற்றங்கள்!
ஏ.டி.எம்-ல் பி.எஃப் பணம் எடுக்கும் வசதி எப்போது? இ.பி.எஃ.ஓ 3.0-ல் காத்திருக்கும் மாற்றங்கள்!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) 3.0 திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான, ஏ.டி.எம் (ATM) வழியாக பி.எஃப் (PF) பணத்தை எடுக்கும் வசதி, 2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என்று மணி கண்ட்ரோல் அறிக்கை தெரிவித்துள்ளது.முன்னதாக, இந்த ஆண்டின் மார்ச் மாதம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வரவிருக்கும் இ.பி.எஃப்.ஓ 3.0 திட்டமானது இ.பி.எஃப்.ஓ. அமைப்பை வங்கிச் சேவை போல அணுகக் கூடியதாகவும், ஏடிஎம் மூலம் பி.எஃப் பணத்தை எடுக்கும் வசதியை எளிதாக்குவதாகவும் இருக்கும் என்று கூறியிருந்தார்.ஏ.டி.எம் மூலம் பணம் எடுக்கும் வசதிக்கான திட்டத்திற்கு, இ.பி.எஃப்.ஓ-வின் முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் வாரியம் (CBT), அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தனது கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டம் அடுத்த மாதத்தின் முதல் பாதியில் நடைபெறும் எனத் தெரிகிறது. ஏ.டி.எம்களில் பி.எஃப் பணத்தை எடுக்கும் வசதியை எளிதாக்குவதற்கான ஐடி (IT) உள்கட்டமைப்பு ‘தயாராக’ உள்ளது. அடுத்த மாத சி.பி.டி. கூட்டத்தில் இந்த வசதிக்கான செயல்பாட்டு விவரங்கள், நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்படும்.சமீபத்திய ஓராண்டில், சுமார் 7.8 கோடி சந்தாதாரர்களுக்குப் பயனளிக்கும் வகையில், இ.பி.எஃப்.ஓ. பல சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இது உரிமைகோரல் முடிவுகளை எளிதாக்குவதையும், உரிமைகோரல் நிராகரிப்பு தொடர்பான குறைகளை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டது. உறுப்பினர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ஆன்லைனில் பணத்தை திரும்பப் பெற (Claims) விண்ணப்பிக்கும்போது காசோலை (Cheque), வங்கிப் பாஸ்புக்கின் (Passbook) புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டிய தேவையை இ.பி.எஃப்.ஓ. முழுமையாக நீக்கியுள்ளது.யு.ஏ.என் எண்ணுடன் வங்கிக் கணக்குகளை இணைக்கும் செயல்முறையை எளிமைப்படுத்த, வங்கிச் சரிபார்ப்புக்குப் பிறகு முதலாளியின் ஒப்புதல் தேவையை EPFO நீக்கியுள்ளது.இ.பி.எஃப்.ஓ 3.0-ல் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன?இ.பி.எஃப்.ஓ 3.0 திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் பிஎஃப் நிர்வகிப்பை மேலும் எளிதாகவும், விரைவாகவும் மாற்றும் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். உரிமைகோரல்கள் தானாகவே தீர்க்கப்பட்டு, அதற்கு கையேடு செயலாக்கம் (Manual Processing) தேவையில்லாத நிலையை EPFO 3.0 உறுதி செய்யும். உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் தொகையின் ஒருபகுதியை நேரடியாக ஏ.டி.எம்.களில் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். இதுவே மிகவும் எதிர்பார்க்கப்படும் அம்சமாக உள்ளது.உறுப்பினர்கள் தங்கள் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்கவோ அல்லது திருத்தவோ படிவங்களை நிரப்பவோ அல்லது EPFO அலுவலகத்திற்குச் செல்ல தேவையில்லை; எந்த நேரத்திலும் வீட்டிலிருந்து இதைச் செய்யலாம். ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குவதற்காக, அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana) மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் பீமா யோஜனா (PM Jeevan Bima Yojana) போன்ற திட்டங்களை EPFO சேர்க்க வாய்ப்புள்ளது. நீண்ட ஆவண வேலைகளுக்குப் பதிலாக, ஓ.டி.பி-ஐ பயன்படுத்தி மாற்றங்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ளலாம்.