இலங்கை
கேபிள் கார் அறுந்து 7 பிக்குகள் சாவு!
கேபிள் கார் அறுந்து 7 பிக்குகள் சாவு!
குருணாகல் பன்சியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெல்சிறிபுர பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பிக்குகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரிவு (24) மதச் சடங்குகளை நிறைவு செய்துவிட்டு குறித்த மடத்திலிருந்து மலை உச்சியிலுள்ள தியான மண்டபத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது குறித்த கேபிள் காரில் 13 பிக்குகள் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து அனைவரையும் குருணாகல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் குறித்த ஏழு பிக்குகள் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த பிக்குகள் 27 – 47 வயதுடைய, ருமேனியா, ரஷ்யா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் இலங்கையர்கள் எனவும் அவர்களில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின்போது கேபிள் காரில் இருந்து குதித்த இரண்டு பிக்குகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பன்சியகம பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.