இலங்கை
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையில் குளோரின் உற்பத்தியை ஆரம்பிக்க நடவடிக்கை!
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையில் குளோரின் உற்பத்தியை ஆரம்பிக்க நடவடிக்கை!
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அமைந்துள்ள வளாகத்தில் கோஸ்ரிக் சோடாக் குளோரின் உற்பத்தித் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியவள ஆய்வை வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயன நிறுவனம் பூர்த்திசெய்துள்ளது.
தற்போது பரந்தன் இரசாயன நிறுவனம் குளோரின் இறக்குமதி செய்து நாடு முழுவதும் விநியோகிக்கின்றது. நாட்டின் நீர் சுத்திகரிப்புக்கான ஒட்டு மொத்தக் குளோரின் இறக்குமதி செய்யப்படுவதால், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் தடைகள் ஏற்படும்போது, நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்பு முழுமையாக நிறுத்தப்படும் நிலைமை காணப்படுகின்றது . குளோரின் இறக்குமதிக்காக செலவாகும் வெளிநாட்டு செலாவணியைக் குறைத்துக் கொண்டு, நீர்ப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு குளோரின் உற்பத்தித் தொழிற்சாலையை உள்நாட்டிலேயே நிர்மாணிப்பது தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அடையாளங்காணப்பட்டுள்ளது. உத்தேச கருத்திட்டத்தை நடை முறைப்படுத்துவதன் மூலம், 95 நேரடி வேலைவாய்ப்புகளும் அண்ணளவாக 2 ஆயிரம் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயனக் கம்பனி அமைந்துள்ள காணியில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள 30 ஏக்கர் காணியில் உத்தேச கருத்திட்டத்தை அரச – தனியார் பங்குடமைக் கருத்திட்டமாக மேற்கொள்வதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் விருப்பக்கோரல்களைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.