இலங்கை
அரசுக்கு சார்பாக செயற்படாத நீதிபதிகளுக்கு இடமாற்றம்; தயாசிறி எம்.பி. குற்றச்சாட்டு!
அரசுக்கு சார்பாக செயற்படாத நீதிபதிகளுக்கு இடமாற்றம்; தயாசிறி எம்.பி. குற்றச்சாட்டு!
அமைச்சர் வசந்த சமரசிங்கவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டமையாலேயே கல்கிசை நீதிமன்ற நீதிபதி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற சுயாதீனம் தொடர்பாகப் பிரதம நீதியரசர் விசேட கவனஞ்செலுத்தவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார் .
நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விவாதம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சுயாதீனமாகச் செயற்பட்ட நீதிமன்ற சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் அரசியல் நோக்கத்துடன் அரசாங்கத்துடன் தொடர்புபட்டுள்ளது. சிரேஷ்டத்துவ மிக்க நீதிபதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.
பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் விடயத்தில் இழைக்கப்படும் அநீதி தொடர்பில் நீதிமன்றக் கட்டமைப்பில் உள்ளவர்களுக்கு முறையிடுவதற்கு எங்கும் இடமில்லை. மேன்முறையீடுசெய்ய முடியாது. இந்த அரசாங்கத்திலும் இவ்வாறான நிலை இடம்பெறுவது பாரதூரமானது. தமக்கு இணக்கமான நீதிபதிகளைத் தமக்குரிய இடத்தில் வைத்துக்கொள்ளும் வகையிலேயே அரசாங்கங்கள் செயற்பட்டுள்ளன. அமைச்சர் வசந்த சமரசிங்கவை கைது செய்து நீதிமன்றத்துக்கு உத்தரவிடுமாறு கல்கிசை நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் வசந்த சமரசிங்க கைது செய்யப்படவில்லை. மாறாக அந்த நீதிபதி கஸ்பேவ மாவட்ட நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்டத்தின் பல நீதிபதிகள் இவ்வாறு முறையற்ற வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கமுடியாது. நாங்கள் இந்தவிடயத்தைச் சர்வதேச நீதிமன்றம், சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம், ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல் ஆகிய இலங்கைக்கு அப்பாற்பட்ட நிறுவனங்களுக்கு கொண்டுசெல்வோம்- என்றார்.