இலங்கை
தங்காலைப் பிரதேசத்தில் மீட்கப்பட்ட போதைப்பொருளுக்கு பெரமுனவும் பதில்கூற வேண்டும்!
தங்காலைப் பிரதேசத்தில் மீட்கப்பட்ட போதைப்பொருளுக்கு பெரமுனவும் பதில்கூற வேண்டும்!
கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவிப்பு
தங்காலை போன்ற இடங்களில் தங்களை மீறி எதுவும் நடக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அடிக்கடி பெருமிதத்துடன் கூறும் நிலையில், தங்காலையில் பெருமளவு போதைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் அவர்கள் பதில் கூறவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
தங்காலையில் பெருந்தொகை போதைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெருந்தொகைப் போதைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இதுவே முதன்முறை. தமிழர்களின் அரசியல் கோட்பாடுகளை. அரசியல் இலட்சியத்தை, அரசியல் செயற்பாடுகளைச் சிதைப்பதற்காகத் திட்டமிட்டுப்பரப்பப்பட்ட போதைப்பொருள்பாவனை இன்று சிங்கள் மக்கள் மத்தியிலும் ஆபத்தை ஏற்படுத்துகின்ற சூழலைத் தோற்றுவித்துள்ளது.
வடக்கு- கிழக்குப் பிரதேசங்கள் ஐஸ் போன்ற போதைப் பொருள்களாலும், மதுப்பழக்கத்தாலும் தற்போது முற்றுமுழுதாக மூழ்கிப் போயுள்ளது. முன்னைய அரசாங்கங்கள் மாத்திரமல்லாமல் தற்போதைய அரசாங்கமும் இதற்குத் திட்டமிட்டு அனுமதித்துள்ளது. தற்போது வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் ஒரு இராணுவச் சிப்பாய்க்கு 10 பொதுமக்கள் என்ற விகிதத்தில் தமிழர் தாயகத்தை இராணுவம் ஆக்கிரமித்துவைத்துள்ளது. அதுவும் வன்னி ஓர் இராணுவச் சிப்பாய்க்கு 4 பொதுமக்கள் என்ற அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் அனுமதி, விருப்பத்தை மீறி வடக்கு – கிழக்கில் போதைப் பொருள் வியாபாரம் நடக்கமுடியாது. எதிரிக்கு எதிரான செயற்பாடுகள் தானே! என்று சிங்கள மக்கள் தங்கள் அரசாங்கங்கள் செய்த மிகத் தவறான செயற்பாடுகளையும் அனுமதித்திருக்கலாம். அவ்வாறானதொரு செயற்பாடே தற்போது தென்னிலங்கையை ஆட்டிப்படைக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்மக்களுக்கும் சிங்களத் தேசத்துக்குமிடையில் காணப்படும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதன் ஊடாக மாத்திரம் தான் இவ்வாறான மோசமான செயற்பாடுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கலாம்- என்றார்.