இலங்கை

நல்லூரில் திலீபனின் நினைவிடத்தில் அமைதியின்மை!

Published

on

நல்லூரில் திலீபனின் நினைவிடத்தில் அமைதியின்மை!

  யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலின்போது “நினைவேந்தலில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது.

இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி வெளியேற வேண்டும்” என்ற தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த பொதுமகனுடன் சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் முரண்பட்டு தர்க்கத்தில் ஈடுபட்டதனால் நிகழ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

Advertisement

தமிழ் மக்களின் விடிவுக்காய் தன்னுயிரை ஈந்த தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (26) நல்லூரில் உள்ள பிரதான நினைவுத் தூபியடியில் நடைபெற்றபோது இந்த சம்பவம் நடைபெற்றது.

நினைவேந்தல் நிறைவடைந்தபோது அங்கு நின்ற ஒருவர் துண்டுப் பிரசுரங்களை நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் விநியோகித்தார்.

துண்டுப்பிரசுரத்தை விநியோகித்த நபரை சம்பந்தப்பட்ட கட்சியின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தித் தாக்க முற்பட்ட நிலையில், அங்கிருந்த ஏனையோர் அவர்களை தடுத்து, துண்டுப் பிரசுரம் விநியோகித்தவரை அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

Advertisement

இந்த சம்பவத்தினால் நினைவிடத்தில் சுமார் 15 நிமிடங்கள் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

அவர் வழங்கிய துண்டுப் பிரசுரத்தில்,

மக்களுக்கான சேவைகளைச் செய்வதற்காகவே மக்களாலே அரசியல் பிரமுகர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். இவர்கள் மக்களுக்கான சேவையினை மட்டுமே முன்னெடுக்க வேண்டும்.

Advertisement

இச்சேவையின் ஊடாக மக்கள் இவர்களை விரும்ப வேண்டும்.

இன்று எமது தமிழ்க் கட்சிகள் சில, மக்களின் எல்லா விடயங்களுக்குள்ளும் மூக்கை நுழைத்து அதனை அரசியலாக்கப் பார்க்கின்றனர்.

எங்களுக்கான உரிமைப் போராட்டத்தில் எத்தனையோ போராளிகள் ஆயுத வழியிலும், அகிம்சை வழியிலும், தன்னைத்தானே வெடித்துச் சிதறியும் போராடியும் மாவீர்கள் ஆனார்கள்.

Advertisement

இவர்கள் இன்றும் எங்களுக்கு தெய்வங்களே. இந்த தெய்வங்களை நாம் வணங்குவதற்கு யாரும் தடைசெய்யவோ, அரசியல் ஆக்கவோ கூடாது.

ஆனால் இந்த மாவீரத் தெய்வங்களின் வழிபாட்டினை அரசியல் கட்சி ஒன்று தனது அரசியலுக்காக பயன்படுத்துகின்றது.

எங்களுடைய மண்ணுக்காக அகிம்சை வழியில் போராடி ஆகுதியாகிய திலீபன் அண்ணாவின் வணக்க நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்நிகழ்வு எக்காலமும் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

இதில் அரசியல் கட்சி ஒன்று உள்நுழைந்து தானே இதனை செய்வதாக காட்டி வருகின்றது. இது மட்டுமில்லாது வணக்கத்தை செலுத்த வரும் சிலரை வணக்கம் செலுத்தவிடாமல் திருப்பி அனுப்புகின்றனர்.

அண்மையில் வணக்கம் செலுத்த வந்த அமைச்சர் ஒருவரையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இவ்வாறு செய்வதற்கு இந்த அரசியல் கட்சிக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

அழையா விருந்தினராக வந்த இவர்கள் ஏன் இவ்வாறு செய்கின்றனர்?

Advertisement

ஒரு வணக்கஸ்தலத்தில் வணக்கம் செலுத்த அனைவருக்கும் உரிமை உண்டு. இன, மத வேறுபாடின்றி இது மதிக்கப்படல் வேண்டும்.

இச் செயற்பாடு அரசியலிற்கு அப்பாற்பட்ட ஒன்றாகும். இதில் காட்டுமிராண்டித்தனமாக யாரும் நடக்கக் கூடாது. அதுவும் மக்களின் சேவகர்கள் இதனை செய்யக்கூடாது.

அந்த வகையில் மக்களால் முன்னெடுக்கப்படும் இவ்வணக்க நிகழ்வில் அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இருக்கக் கூடாது என்பதோடு, தற்போது இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி இதிலிருந்து உடன் வெளியேற வேண்டுமென வேண்டுகின்றோம் என்றுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version