விளையாட்டு
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் சொன்ன கருத்து: 30% அபராதம் விதித்த ஐ.சி.சி
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் சொன்ன கருத்து: 30% அபராதம் விதித்த ஐ.சி.சி
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. மிகவும் பரபரப்பாக அரங்கேறி வரும் இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. அதன்படி, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றன.லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. தற்போது இந்த அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழையும். இதில் 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதேபோல் 3 போட்டிகளில் ஆடி 2-ல் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப் போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) துபாயில் நடக்கிறது. இந்த நிலையில், செப்டம்பர் 14 அன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்த கருத்துகளுக்காக அவரது போட்டிக் கட்டணத்தில் 30% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.லீக் சுற்றில் பாகிஸ்தானை தோற்கடித்த பிறகு பேட்டி அளித்த இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் இந்த வெற்றியை ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பாதுகாப்பு படையினருக்கு அர்ப்பணிக்கிறோம் என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து, அவர் விளையாட்டில் அரசியலை கலப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் புகார் அளித்தது. இதன் அடிப்படையில் போட்டி நடுவர் ரிச்சி ரிச்சார்ட்சன் முன் சூரியகுமார் யாதவ் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜரானார். அவருடன் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் உடன் சென்றனர். ஐ.சி.சி.யின் விதிமுறைப்படி போட்டியின்போது வீரர்கள் அரசியல் பேசக்கூடாது என்பதால் அத்தகைய கருத்துகளை தவிர்க்கும்படி போட்டி நடுவர், சூரியகுமாரை அறிவுறுத்தினார். இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்த கருத்துகளுக்காக அவரது போட்டிக் கட்டணத்தில் 30% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.