பொழுதுபோக்கு
முதல் சீன் 10 டேக், புடவை நெஞ்சில் கட்டி குளிக்கிற சீன் மறக்க முடியாது; ரேவதி மண் வாசனை அனுபவம்!
முதல் சீன் 10 டேக், புடவை நெஞ்சில் கட்டி குளிக்கிற சீன் மறக்க முடியாது; ரேவதி மண் வாசனை அனுபவம்!
நடிகை ரேவதி, தான் அறிமுகமான இயக்குநர் பாரதிராஜாவின் ‘மண் வாசனை’ (1983) திரைப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் பக்கத்திற்கு அளித்த நேர்க்காணலில் கூறியிருப்பார். தனது ஆரம்பகால சினிமா அனுபவம், குறிப்பாக முதல் காட்சியில் ஏற்பட்ட தடுமாற்றம் மற்றும் மிகவும் சவாலான ஒரு மறக்க முடியாத குளியல் காட்சி பற்றிய நினைவுகளை அவர் பகிர்ந்துக்கொண்டார்.பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு… என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் முகத்தின் ஒரு பாதியை மறைத்துக் கொண்டு வெட்கப்படும் ரேவதியின் முகம் நிச்சயம் நம் மனதில் வந்துபோகும். தமிழ் சினிமாவின் 80-களின் கதாநாயகிகளில் தனித்துவமானவர் ரேவதி. இரண்டு முறை தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர் ரேவதி. இன்றும் கூட சில படங்களில் நடித்து வருகிறார்.இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய கதாநாயகிகளில் ஒருவர் ரேவதி. முதல் படமான ‘மண்வாசனை’யில் நடிக்கும்போது ரேவதிக்கு 16 வயதுதான். ஆனால், அவர் அந்த படத்தில் மெச்சூரான கேரக்டரில் நடித்திருந்தார். சினிமாவில் தனக்கு எந்த அனுபவமும் இல்லாத நிலையில், முதல் படமான ‘மண் வாசனை’ படப்பிடிப்பில் பல சவால்களைச் சந்தித்ததாக ரேவதி தெரிவித்தார். படத்தின் முதல் காட்சியை எடுக்கும்போதே தான் மிகவும் பதட்டமடைந்ததாகவும், அந்தக் காட்சியைச் சரியாகப் படமாக்க இயக்குநர் பாரதிராஜா கிட்டத்தட்ட 10 டேக்குகளுக்கு மேல் எடுத்ததாகவும் ரேவதி குறிப்பிட்டுள்ளார். கிராமத்துப் பின்னணியில், அந்த கதாபாத்திரமாகத் தன்னை மாற்றிக்கொள்ள நேரம் எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். ‘மண் வாசனை’ படப்பிடிப்பில் தான் மறக்க முடியாத, மற்றும் தனக்கு மிகவும் கடினமாக இருந்த காட்சி என்றால், அது ஆற்றில் குளிக்கும் காட்சிதான் என்று ரேவதி கூறியுள்ளார்.”அந்தக் காட்சிதான் எனக்கு மிகவும் மறக்க முடியாதது. ஆற்றில் இறங்கி பாவாடையை மார்போடு இறுக்கிக் கட்டிக்கொண்டு குளிக்க வேண்டும். அந்த வயதுக்கு அது எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. அந்தக் காட்சியைக் கொடுக்க நான் கிட்டத்தட்ட அரை நாள் அழுதேன்,” என்று ரேவதி நினைவு கூர்ந்தார். மேலும் அன்று ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டதாகவும் கூறினார்.இயக்குநர் பாரதிராஜா தன்னை சமாதானப்படுத்தி, அது சினிமாவுக்காக எடுக்கப்படும் காட்சி என்பதைப் புரியவைத்து, அதன் பின்னரே தான் நடித்ததாகவும், ஆனால் இன்றளவும் அந்தக் காட்சி தனக்கு மறக்க முடியாத அனுபவமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பிரேமுக்கு வெளியில் சில பெண்களை குளிக்க வைத்தார் என்றும் ஆனால் அவர்கள் ப்ரேமுக்கு வெளியில் குளித்தார்கள் என்றும் கூறினார். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை அனைவரும் குழந்தை மாதிரி நடத்தியதாகவும் கூறினார்.