பொழுதுபோக்கு
அண்ணாத்த கதையே வேற… நயன்தாரா வந்ததும் எனக்கு முக்கியத்துவம் இல்ல; குஷ்பு த்ரோபேக் பேச்சு
அண்ணாத்த கதையே வேற… நயன்தாரா வந்ததும் எனக்கு முக்கியத்துவம் இல்ல; குஷ்பு த்ரோபேக் பேச்சு
தயாரிப்பாளர், நடிகை, அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் நடிகை குஷ்பு. தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் நடிகை குஷ்பு நடித்திருந்தார்.ஆனால், எடிட்டிங்கில் அந்த காட்சிகள் நீக்கப்பட்டது. அதற்கு முன்பு நடிகர் ரஜினியின் 168-வது திரைப்படமான ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அண்ணன் – தங்கையின் பாசத்தை விளக்கும் படமாக உருவான ‘அண்ணாத்த’ திரைப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை.படம் சீரியல் போல இருக்கிறது என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து இருந்தனர். மேலும் படம் பலவித எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் ரஜினியுடன் ’அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தமடைந்ததாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாது. எனக்கு சொன்ன கதைப்படி ரஜினிக்கு ஜோடி இல்லை. அப்போது எங்களுக்கு முக்கியத்துவம் இருந்தது. இரண்டாம் பாகத்தில் ரஜினி தங்கச்சியை தேடி போகும் போது ஒரு பக்கம் மீனா போவாள். ஒரு பக்கம் நான் போவேன். அப்படிதான் கதை எங்களுக்கு கதை சொல்லப்பட்டது. மேலும், ரஜினிக்கு ஒரு தலை காதல் மட்டும் தான் இருக்கிறது. அதனால், சின்ன ஆர்ட்டிஸ்ட் போட்ட போதும் என்று இரண்டு, மூன்று பெயர்கள் சொன்னார்கள். டூயட் பாடல் எதுவும் இல்லை என்றதால் நாங்களும் சிலபேரை பரிந்துரைத்தோம். திடீரென்று ஒரு கதாநாயகி நயன்தாரா வந்தார்கள். டூயட் பாடல் வந்தது. இதனால் எங்கள் கதாபாத்திரத்திற்கு எந்த முக்கியத்துவம் இல்லாமல் போனது. இடைவேளை வரை வருகிறோம். அப்பறம் எங்களை காணவில்லை. எதற்கு வந்தோம்? எதற்கு சென்றோம் என்பதே தெரியவில்லை.கதையை மாறியதால் இப்படி எங்கள் கதாபாத்திரம் கேலி சித்திரமாக மாறிவிட்டது” என்றார். குஷ்புவின் இந்த கருத்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.