பொழுதுபோக்கு
கலைஞருக்கு எதிரான படம், தியேட்டரில் ஓட விடாம பண்ணிட்டாங்க; 27 ஆண்டு உண்மை உடைத்த சேரன்!
கலைஞருக்கு எதிரான படம், தியேட்டரில் ஓட விடாம பண்ணிட்டாங்க; 27 ஆண்டு உண்மை உடைத்த சேரன்!
தமிழ் சினிமா எத்தனையோ இயக்குநர்களை பார்த்திருக்கிறார். அப்படி பார்த்தவர்களில் முக்கியமான ஒரு இயக்குநர் சேரன். தனது முதல் படமான ‘பாரதி கண்ணம்மா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர் சேரன்.தொடர்ந்து, ’பொற்காலம்’, ’வெற்றி கொடி கட்டு’, ’பாண்டவர் பூமி’, ’ஆட்டோஃகிராப்’, ’தவமாய் தவமிருந்து’ என பல ஃபீல்குட் படங்களை கொடுத்துள்ளார். பல படங்களில் நாயகனாகவும் நாயகனாகவும் நடித்துள்ளார். சேரன் இயக்கிய படங்கள் அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர் படத்தில் இடம்பெறும் வசனங்கள், திரைக்கதை எல்லாம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கும். இந்நிலையில், இயக்குநர் சேரன் 27 ஆண்டுகளுக்கு முன்பு தான் இயக்கிய படம் குறித்து மனம் திறந்துள்ளார்.அவர் பேசியதாவது, “வெற்றி கொடி கட்டு திரைப்படத்திற்கு இடையில் ’தேசிய கீதம்’ என்ற படம் இயக்கினேன். அந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால், பெரிய அளவில் பேசப்பட்டது. கலைஞரை எதிர்த்து படம் பண்ணிவிட்டேன். இது காங்கிரஸார் படம் என்று அந்த படத்தை பேசினார்கள். ஜூனியர் விகடனின் அட்டை படத்தில் ஒரு பக்கம் கலைஞர் ஒரு பக்கம் என் புகைப்படத்தை போட்டார்கள்.அது எனக்கே தெரியாத வளர்ச்சி. எனக்கே தெரியாத ஒரு இடம். இந்த சர்ச்சைகளுக்கு பிறகு இனிமேல் சேரனை வைத்து படம் செய்ய முடியாது. அரசாங்கம் அந்த படத்தை எதிர்க்கும் என்று தயாரிப்பாளர்கள் யோசித்தார்கள். இதனால் நான் ஒரு வருடம் படம் இல்லாமல் இருந்தேன். ‘தேசிய கீதம்’ படம் ஓடாமல் இருந்ததற்கு அரசியல் தலையீடு காரணமாக இருந்தது. முதல் நாள் இந்த படத்தை நான் பார்க்கும் பொழுது மக்கள் படத்தை வரவேற்றார்கள். ’தேசிய கீதம்’ திரைப்படம் மக்களின் மனதை பிரதிபலித்தது. அந்த படத்தை வெற்றி பெற வைக்கவில்லை. அந்த படத்தை ஓடவிடக் கூடாது என்பதில் ஒரு தரப்பினர் கவனமாக இருந்ததால் அந்த படத்தை திரையரங்கில் இருந்து எடுத்துவிட்டார்கள். பா.சிதம்பரம் எல்லாம் படம் பார்த்துவிட்டு காங்கிரஸார் சொல்ல வேண்டிய படம் என்றார்.இதை பார்த்த தி.மு.க-வினர் இது அவர்களுக்கு எதிரான படம் என்று நினைத்துக் கொண்டார்கள். அதன்பிறகு, கலைஞரை போய் பார்த்தேன். அப்போது நான் சொன்னேன் உங்கள் திரைப்படங்கள் மூலம் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை பேசிக்கொண்டே இருந்தீர்கள். ‘பராசக்தி’ திரைப்படம் அரசிற்கு எதிரான படம் தான். அதை நீங்கள் தைரியமாக சொன்னீர்கள்.அதேபோல், ஒரு மனுதான் ‘தேசிய கீதம்’ திரைப்படம். அரசாங்கத்தின் திட்டம் கிராமத்திற்கு வந்து சேரவில்லை என்பதை எடுத்துரைக்கும் மனுதான் அந்த படம். நான் தவறு செய்ய வேண்டும் என்று செய்யவில்லை என்று சொன்னேன். அவர் அனுப்பிவிட்டார்” என்றார்.