இந்தியா
புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளை மிரட்டி பணம் பறிப்பு: 2 போலீசார் பணியிடை நீக்கம்
புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளை மிரட்டி பணம் பறிப்பு: 2 போலீசார் பணியிடை நீக்கம்
புதுச்சேரியில், சுற்றுலாப் பயணிகளை மிரட்டி பணம் பறித்ததாக, உருளையன்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 இளைஞர்கள் சுற்றுலாப் பயணிகளாக புதுச்சேரிக்கு வந்துள்ளனர். அவர்கள் குடிபோதையில் இருந்த நிலையில், சம்பவத்தன்று இரவு மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அமர்ந்து சாப்பிட்டனர். சாப்பிட்ட பிறகு, அவர்கள் ஜி-பே (G-Pay) மூலம் பணம் செலுத்த முயன்றபோது, கடை ஊழியர் ஜி-பே வேலை செய்யவில்லை எனக்கூறி பணமாகக் கேட்டார். அப்போது அங்கு வந்த திருநங்கை, “நீங்க ஜி-பே மூலம் எனக்கு ரூ.1,000 அனுப்புங்கள், நான் உங்களுக்கு ரூ.900 ரொக்கமாகக் கொடுக்கிறேன்” என்று கூறியுள்ளார். அந்த இளைஞர்கள் அந்தத் திருநங்கைக்குப் பணம் அனுப்பியதைத் தொடர்ந்து, அவர் அவர்கள் கையில் பணத்தைக் கொடுத்தார். அப்போது, உருளையன்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த மாதவன், திவாகர் என்ற 2 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் அந்த இளைஞர்களைப் பிடித்து, “விபசாரத்தில் ஈடுபடுகின்றீர்களா?” என்று மிரட்டியுள்ளனர்.மேலும், “உங்களைக் விபசார வழக்கில் கைது செய்வோம். இதைத் தவிர்க்க வேண்டுமானால் ரூ.20,000 தர வேண்டும்” என்று மிரட்டியுள்ளனர். பயந்துபோன அந்த வாலிபர்கள், அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்குச் சென்று ₹20 ஆயிரத்தை எடுத்து, அதனைப் போலீஸ்காரர்கள் கையில் கொடுத்தனர். இருப்பினும், போலீஸ்காரர்கள் மேலும் ரூ.20000 கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அந்த இளைஞர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர். பின்னர், இதுகுறித்து அவர்கள் உடனடியாகக் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குப் புகார் தெரிவித்தனர்.காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்தப் போலீஸ்காரர்களைப் பிடித்து விசாரித்தபோது, அவர்களது கையில் ₹20 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் 2 பேரும் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் (Suspension) செய்து போலீஸ் டி.ஜி.பி. ஷாலினி சிங் உத்தரவிட்டுள்ளார்.செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி