இலங்கை
அரச அடக்குமுறைக்கு எதிராக மன்னாரை முடக்கி இன்றுபோராட்டம்; அனைத்துத் தரப்புகளுக்கும் அழைப்பு!
அரச அடக்குமுறைக்கு எதிராக மன்னாரை முடக்கி இன்றுபோராட்டம்; அனைத்துத் தரப்புகளுக்கும் அழைப்பு!
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலைத் திட்டத்துக்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் இன்று மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பொதுமுடக்கல் போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்று மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர், அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
மன்னார் மாவட்டம் முழுவதும் நாளை (இன்று) திங்கட்கிழமை பொதுமுடக்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம். அனைத்துச் செயற்பாடுகளையும் முழுமையாக நிறுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுப்போக்குவரத்துக்கள் அனைத்தையும் நிறுத்தி, வர்த்தக நிலையங்களை மூடி மாவட்டத்தை ஸ்தம்பிதமடையச் செய்து எமது போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இன்றுதிங்கட்கிழமைகாலை 10 மணிக்கு மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டனப்பேரணி ஆரம்பமாகும். இந்தப்பேரணி மன்னார் பஸார் பகுதியை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் பிற்பகல் 1.30 மணிவரை முன்னெடுக்கப்படும். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் எமது கோரிக்கைகள் அடங்கிய ஜனாதிபதிக்கான மனு மன்னார் மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்படும்.
மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் எமது உரிமைக்கான போராட்டத்தில் மீனவர்கள், வர்த்தகர்கள்,பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்போர் உட்பட அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு பூரண ஆதரவை வழங்க வேண்டும் – என்றார்.