இலங்கை

கட்டுப்பாட்டை இழந்த மோ.சைக்கிள்; 5 வயது சிறுமி பரிதாப மரணம்

Published

on

கட்டுப்பாட்டை இழந்த மோ.சைக்கிள்; 5 வயது சிறுமி பரிதாப மரணம்

சங்குப்பிட்டிப் பாலமருகே சோகம்

சங்குப்பிட்டிப் பாலமருகே கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 5 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார்சைக்கிளைச் செலுத்தி வந்த இளைஞர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்றுக் காலை நடந்துள்ளது.

Advertisement

சுடரொளியன் தனுஷ்கா (வயது – 5) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். மந்துவிலைச் சேர்ந்த குடும்பம் ஒன்று பூநகரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு விட்டுத் திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது. ஒரு மோட்டார்சைக்கிளில் உயிரிழந்த சிறுமியின் தாய், சித்தி மற்றும் இளைஞர் என நால்வர் பயணித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. மோட்டார் சைக்கிள் சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகே மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கடும் காற்று மற்றும் கவனக்குறைவால் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும், சிறுமி தலைக்கவசம் அணியவில்லை என்றும் கூறப்படுகின்றது.

விபத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்ல அந்தவழியால் சென்ற எவரும் உதவவில்லை என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தற்செயலாக அந்த வழியால் வந்த யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்ததுடன், அம்புலன்ஸ்களுக்கு அறிவித்துள்ளார். வாகனம் ஒன்றில் சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருந்த நிலையில், சாவகச்சேரியில் இருந்து அம்புலன்ஸ் வந்ததை அடுத்து சிறுமி அம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அதேவேளை, பூநகரியில் இருந்து வந்த அம்புலன்ஸ் மூலம் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Advertisement

சிறுமியின் உடல் சாவகச்சேரி மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. விபத்துச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version