இந்தியா
பிரபல நிழலுலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது கனடா அரசு
பிரபல நிழலுலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது கனடா அரசு
பிரபல நிழலுலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் குழுவை தீவிரவாத இயக்கமாக கனடா அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கை மூலம், பிஷ்னோய் கும்பலுக்கு நிதி அல்லது பொருள் ரீதியான உதவிகளைச் செய்வதற்கு கனடா நாட்டினருக்குத் தடை விதிக்கப்படுவதுடன், அதன் சொத்துக்களை முடக்குதல், சொத்துக்களைப் பறிமுதல் செய்தல் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்தல் ஆகிய அதிகாரங்களைச் சட்ட அமலாக்கத் துறை பெற்றுள்ளது.பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரீ (Gary Anandasangaree) கூறுகையில், “வன்முறை மற்றும் அச்சுறுத்தல் மூலம் அச்சத்தை விதைக்கும் ஒரு குழுவை எதிர்த்துப் போராட இந்த அறிவிப்பு சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது,” என்று தெரிவித்தார். ராஜஸ்தானில் உருவாகிய இந்தக் கும்பல், ஒரு எல்லை தாண்டிய சிண்டிகேட் ஆகும்.பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்டாரியோ மற்றும் ஆல்பர்ட்டா ஆகிய மாகாணங்களில் சுறுசுறுப்பாகச் செயல்படும் இக்கும்பல், 2023 ஆம் ஆண்டு முதல் 50-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. பிரபல பஞ்சாபி இசைக் கலைஞர்கள் ஏ.பி. டில்லான் (A P Dhillon) மற்றும் கிப்பி கிரேவால் (Gippy Grewal) ஆகியோரின் வீடுகளில் தீக்குண்டு வீசியது. இந்த ஆகஸ்ட்டில் நகைச்சுவை நடிகர் கபில் ஷர்மாவின் (Kapil Sharma) சர்ரேயில் உள்ள கஃபேயில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. தெற்காசிய சமூகத்தினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட பரவலான பணப்பறிப்பு (Extortion) மோசடிகளும் அரங்கேறின.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஇந்த அறிவிப்பானது பல மாதங்களாக அரசியல் மற்றும் சமூகத்தின் மத்தியில் இருந்த அழுத்தத்தைத் தொடர்ந்து வந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் ஈபி, “எங்கள் மண்ணில் அரசு நிதியுதவியுடன் பயங்கரவாதத்தை” மேற்கொள்வதாகக் குறிப்பிட்டு, பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.கடந்த 2024 அக்டோபரில், ஆர்.சி.எம்.பி. ஆணையர் மைக் டுஹீம் (Mike Duheme), 2023 ஜூன் மாதம் சர்ரேயில் நடந்த காலிஸ்தான் ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கொலையுடன் இந்தக் கும்பல் தொடர்புபடுத்தப்பட்டு, அது “அரசு நிதியுதவியுடன் கூடிய செயல்பாடுகள்” என்றும் இணைத்துக் கூறியிருந்தார். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது. கடந்த ஆண்டு, நிஜ்ஜார் கொலைக்காக 2024 மே மாதம் கைது செய்யப்பட்ட கரண் பிரார் (Karan Brar) மற்றும் கரண்ப்ரீத் சிங் ஆகியோர் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்பு உடையவர்கள் என்றும் ஆர்.சி.எம்.பி. இணைத்துள்ளது.பிஷ்னோய் கும்பலின் கனடா செயல்பாடுகளை, கோல்டி பிரார் (Goldy Brar) எனப்படும் 29 வயதான தாதா நிர்வகித்து வருவதாகக் கூறப்படுகிறது. 2017-ம் ஆண்டு மாணவர் விசாவில் இந்தியாவிலிருந்து தப்பிச்சென்ற பிரார், நீண்ட காலமாகப் பிஷ்னோயின் முக்கிய தளபதியாக இருந்து வருகிறார். 2022-ஆம் ஆண்டு பிரபல பஞ்சாபி ராப்பர் சித்து மூஸ் வாலா (Sidhu Moose Wala) கொலையில் இவர் பகிரங்கமாகப் பொறுப்பேற்றார். என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஆப்கள் மூலம் பிஷ்னோயின் சிறை அடிப்படையிலான வலையமைப்பை ஒருங்கிணைத்து, கனடாவில் இருந்தே பணம் பறிப்பு மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொலைகளை பிரார் நடத்தி வருகிறார்.இந்த அறிவிப்பு பிஷ்னோய் கூட்டாளிகள், குறிப்பாக கோல்டி பிரார் மீதான நாடு கடத்தல் வழக்குகளில் ஒட்டாவாவின் கையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா – கனடா உறவுகள் மேம்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், கைது நடவடிக்கை மட்டும் போதுமா என்பதில் நிபுணர்களுக்கு சந்தேகம் உள்ளது. “குற்றப் புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதற்கான கனடாவின் திறனில் உள்ள பற்றாக்குறை தான் முக்கியப் பிரச்னை” என்று சர்வதேச நிர்வாக புதுமை மையத்தைச் (Centre for International Governance Innovation) சேர்ந்த வெஸ்லி வார்க் தெரிவித்துள்ளார்.கனடாவில் பிஷ்னோய் கும்பல் நடத்தியதாக ஆர்.சி.எம்.பி. ஆவணப்படுத்திய மற்ற வன்முறைச் சம்பவங்கள், செப்டம்பர் 2023 எட்மண்டனில் காலிஸ்தான் தொடர்பான நபரான சுக்தூல் சிங் கில் (Sukhdool Singh Gill) கொலை (இதற்கு கும்பல் ஆன்லைனில் பொறுப்பேற்றது). ஜூலை 2025 பிராம்ப்டன் தொழிலதிபர் ஹர்ஜித் சிங் (Harjit Singh) கொலை (இதில் பிஷ்னோய் உடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேக நபர்கள் ஃபேஸ்புக்கில் ஒப்புக்கொண்டனர்). இந்த அறிவிப்பு கனடா முழுவதும் உள்ள சமூகத்தினருக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.