இலங்கை

இலங்கையின் டிஜிட்டல் யுக முன்னேற்றத்துக்கு மனித வள மேம்பாடு அவசியம் – ஹரிணி அமரசூரிய!

Published

on

இலங்கையின் டிஜிட்டல் யுக முன்னேற்றத்துக்கு மனித வள மேம்பாடு அவசியம் – ஹரிணி அமரசூரிய!

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை அமெரிக்க டொலர் 15 பில்லியனாக, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12% ஆக அதிகரிப்பதும், டிஜிட்டல் ஏற்றுமதியை அமெரிக்க டொலர் 5 பில்லியன் வரை உயர்த்துவதோடு, சுமார் இரண்டு இலட்சம் திறன்மிக்க டிஜிட்டல் தொழில் படையை உருவாக்குவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கையில் முதன்முறையாக நடைபெற்ற AI தொழில்நுட்பம் பற்றிய “NATIONAL AI EXPO 2025” மாநாடு மற்றும் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட போதே, திங்கட்கிழமை (29) பத்தரமுல்லை மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

Advertisement

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாநாடு மற்றும் கண்காட்சி செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் பத்தரமுல்லை மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடைபெறுகிறது.

“AI” தேசிய கண்காட்சி என்பது செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட புத்தாக்கங்களுக்கான முதன்மையான பயண இலக்காகும்.

செயற்கை நுண்ணறிவை நவீன தொழில்நுட்பத்துடன் பயன்படுத்துதல், ஆராய்ச்சியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஊக்குவித்தல், பாடசாலைப் பருவத்திலிருந்தே AI தொழில்நுட்பத்தையும் அதற்கான கருவிகளின் பயன்பாட்டையும் அறிமுகப்படுத்துதல் ஆகியவை இந்த மாநாட்டின் நோக்கங்களாகும்.

Advertisement

இங்கே மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு தொழில்நுட்பம் மட்டுமல்ல, அது இன்று நாம் எடுக்கும் தீர்மானங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு காரணியாக மாறி இருக்கின்றது.

டிஜிட்டல் பொருளாதார மாதம்” எனப் பெயரிடப்பட்டுள்ள செப்டம்பர் மாதத்தின் மிக முக்கியமான விடயம் மக்களிடையே டிஜிட்டல்மயமாக்கல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதாகும்.

Advertisement

டிஜிட்டல் கருவிகள் எமது அன்றாட வாழ்க்கையில் வேலைகளை எளிதாக்கவும், உலகப் பொருளாதாரத்துடன் இணைவதற்கும் நடைமுறைச் சாத்தியமான வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றது.

நாடு தழுவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படும் கண்காட்சிகள் மற்றும் பயிற்சித் திட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலம் நாம் டிஜிட்டல் திறன், வர்த்தக புத்தாக்கம், மற்றும் அரசாங்கத்தின் E-சேவைகளைப் பயன்படுத்துவதைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையை டிஜிட்டல்மயமாக்க வேண்டுமாயின், நம் நாட்டின் கல்வி மூலம் புதிய தொழில்நுட்பங்களைக் கற்பதற்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்து, அதன் மூலம் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடிய மனித வளத்தை உருவாக்க வேண்டும்.

Advertisement

அதற்காகவே இலங்கையின் கல்வி உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல் மற்றும் பாரிய கல்விச் சீர்திருத்தத்தை மேற்கொள்ள நாம் ஆரம்பித்திருக்கின்றோம்.

செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், காலநிலை விஞ்ஞானம் போன்ற புதிய பாடங்களை அறிமுகப்படுத்துதல், அதற்காக 100,000 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல், மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்குத் தேவையான வளங்களை வழங்குதல் ஆகியவற்றுக்கான பணிகளை நாம் இப்போது மேற்கொண்டு வருகிறோம்.

நாட்டின் அனைத்துப் பிள்ளைகளுக்கும், அனைத்துக் குடிமக்களுக்கும் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதன் நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம்.

Advertisement

ஏற்கனவே அரச சேவைகளில் காணப்படுகின்ற சிக்கலான தன்மையைக் குறைப்பதற்கும், சேவை வழங்குதலை விரைவுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் E-சேவைகளைப் பயன்படுத்தக்கூடிய தளங்களை நாம் அமைத்து, செயல்படுத்தி வருகிறோம்.

GovPay மற்றும் இணைய வழி வாயிலாக வாகன அபராதங்களைச் செலுத்தும் முறைமைகளை விரிவுபடுத்துவதன் மூலம் கொடுக்கல் வாங்கல்களை விரைவுப்படுத்துவதன் மூலமும், புதிய உற்பத்தித் துறைக்காக aigov.lk என்ற தேசிய AI தளத்தை அறிமுகப்படுத்தி, நாம் மேலும் ஒரு படி முன்னேற்றம் கண்டுள்ளோம்.

அத்துடன், தேசிய மூலோபாயம் மற்றும் செயல்பாட்டு மையம் மூலம் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தி வருகிறோம். இதன் மூலம் டிஜிட்டல் சந்தைக்கு அத்தியாவசியமான பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதி செய்து வருகிறோம்.

Advertisement

இந்தத் திட்டங்கள், வர்த்தகர்களுக்குப் புதிய சந்தைகளை உருவாக்குதல், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் (SMEs) செயல்திறனை அதிகரித்தல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் இலங்கையை தெற்காசியாவின் டிஜிட்டல் சேவைகள் மையமாக மாற்றி அமைக்க இயலுமெனப் பிரதமர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, மொபிடெல் நிறுவனத் தலைவர் கலாநிதி மோதிலால் டி சில்வா ஆகியோர் உட்பட பல துறைசார் நிபுணர்களும் கலந்துகொண்டனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version