பொழுதுபோக்கு
படம் அருமையா இருக்கு, ஆனா இந்த பையன் ரொம்ப நோஞ்சான் மாதிரி இருக்கானே; சிவாஜியின் முதல் படத்திற்கு வந்த சோதனை!
படம் அருமையா இருக்கு, ஆனா இந்த பையன் ரொம்ப நோஞ்சான் மாதிரி இருக்கானே; சிவாஜியின் முதல் படத்திற்கு வந்த சோதனை!
சிவாஜி கணேசன், தமிழ் சினிமாவின் நடிப்புத் திலகம் என்று போற்றப்படும் மிகச் சிறந்த நடிகர். இவர் தலைமுறையையும் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு கலைஞர். நாடக மேடையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்.நடிகர் சிவாஜி கடந்த 1952-ஆம் ஆண்டு வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அவர் பேசிய வசனங்கள், உடல் மொழி, மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு ஆகியவை தமிழ் சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது. தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த பெருமை கொண்டவர் சிவாஜி.சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன் தான். 90 காலக்கட்டத்தில் சினிமாவில் நடிக்க வரும் பெரும்பாலானோர் ‘பராசக்தி’ படத்தில் சிவாஜி பேசிய வசனத்தை தான் மனப்பாடம் செய்து வருவார்கள்.கலைஞர் கருணாநிதி எழுதிய ’பராசக்தி’ படத்தின் வசனங்கள் இன்று வரை எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது. நடிகர் சிவாஜி, ரஜினி, விஜய் உள்ளிட்ட நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சிவாஜியின் முதல் படத்தில் அவருக்கு வந்த சோதனை குறித்து ஏ.வி.எம் குமரன் பேசியுள்ளார்.அவர் பேசியதாவது, “ஏ.வி.எம் இந்த படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக வந்திருக்கிறது. ஆனால், இந்த படத்தில் ஒரு குறை இருக்கிறது என்றார். இதை கேட்டதும் இயக்குநர் எல்லாரும் பதற்றமாகி எங்களுக்கு எந்த குறையும் தெரியவில்லையே சார் என்றார்கள்.அதற்கு ஏ.வி.எம் இல்லை ஒரு குறை உள்ளது. கதாநாயகன் சிவாஜி பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள். ஆனால் சிவாஜி ரொம்ப நோஞ்சன் மாதிரி இருக்கிறார். கன்னம் எல்லாம் ஒட்டிப்போய் ரொம்ப ஒரு மாதிரி இருக்கிறார்.இவர் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரம். அதனால் கொஞ்சம் யோசித்து பாருங்கள்” என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.