இந்தியா

புதுச்சேரி சட்டமன்றத்தை நோக்கி மாதர் சங்கத்தினர் பேரணி: ரேஷன் பொருட்கள் வழங்க வலியுறுத்தல்

Published

on

புதுச்சேரி சட்டமன்றத்தை நோக்கி மாதர் சங்கத்தினர் பேரணி: ரேஷன் பொருட்கள் வழங்க வலியுறுத்தல்

கடந்த 3 மாதங்களாக ரேஷன் அரிசி வழங்கப்படாததைக் கண்டித்தும், தீபாவளி பண்டிகைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே வழங்கக் கோரியும், புதுச்சேரி மாதர் சங்கத்தினர் மண் பானை, பருப்பு, கல், மணல், சிமெண்ட் ஜல்லி ஆகியவற்றுடன் சட்டமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். சட்டமன்றம் அருகே சாலையில் காலி பானையை உடைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.அண்ணா சிலை சதுக்கத்தில் ஒன்று திரண்ட மாதர் சங்க உறுப்பினர்கள், தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், காலி மண் பானை, பருப்பு, கல், மணல், சிமெண்ட் ஜல்லி மற்றும் விறகுகளுடன் சட்டமன்றத்தை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர். அண்ணா சாலை, நேரு வீதி, மிஷின் வீதி வழியாகச் சென்று மாதா கோவிலை அடைந்தது. அங்குப் போலீசார் தடுப்புக் கட்டைகள் அமைத்து அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மாதர் சங்கத்தினர் அங்கேயே நின்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவேசமாகக் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.தொடர்ந்து, பேரணியில் கொண்டு வந்திருந்த கல், மணல், சிமெண்ட் ஜல்லி மற்றும் விறகுகளைச் சாலையில் வீசி எறிந்த அவர்கள், முக்கியமாக ரேஷன் பொருட்கள் இல்லாததைக் குறியீடாகக் காட்டும் வகையில், காலி மண் பானையைச் சாலையில் போட்டு உடைத்துத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.இதுகுறித்து மாதர் சங்கத்தின் தேசியப் பொதுச் செயலாளர் சுதா சுந்தர்ரமன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “தீபாவளிக்கு அறிவிக்கப்படும் பொருட்கள் பண்டிகை முடிந்த பிறகே வழங்கப்படுகின்றன. இந்த முறை அதுபோன்று வழங்கினால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். எனவே, பண்டிகைக்கு முன்னரே தீபாவளிப் பொருட்களை வழங்க வேண்டும். அத்துடன், வழங்கப்படாமல் உள்ள மூன்று மாத இலவச அரிசியையும் உடனடியாக வழங்க வேண்டும்.”மேலும், “போதைப்பொருள் விற்பனை, ரெஸ்டோ பார் (resto bar) போன்ற விஷயங்களில் மட்டுமே அக்கறை செலுத்தும் புதுச்சேரி அரசு, மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் சிறிதும் அக்கறை செலுத்தவில்லை” என்றும் அவர் குற்றம் சாட்டினார். சட்டமன்றம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version