பொழுதுபோக்கு

தனுஷின் ‘இட்லி கடை’: சிறுவயது அனுபவங்களை அடிப்படையாக கொண்ட படம்!

Published

on

தனுஷின் ‘இட்லி கடை’: சிறுவயது அனுபவங்களை அடிப்படையாக கொண்ட படம்!

தான் சிறுவனாக இருந்தபோது சந்தித்த இடங்கள் மற்றும் மக்களை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள புதிய திரைப்படம் ‘இட்லி கடை’, திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமையல் கலைஞர் ஒருவரின் கிராமத்துப் பற்றும், சொந்த மண்ணின் மதிப்பை உணர்த்தும் பாசப் போராட்டமும் தான் இப்படத்தின் மையக்கரு.கிராமத்தில் பல வருடங்களாக இட்லிக் கடை நடத்தி வரும் சிவநேசன் (ராஜ்கிரண்), தனது எளிமையான வாழ்க்கையில் சந்தோஷம் காண்கிறார். ஆனால் அவரது மகன், சமையல் கலைஞரான முருகன் (தனுஷ்), மேம்பட்ட வாழ்க்கைக்காக அப்பாவின் கடையை உதறிவிட்டு வேலை தேடி பாங்காக் செல்கிறார்.அங்கு, தொழில் அதிபர் விஷ்ணுவர்தனிடம் (சத்யராஜ்) வேலைக்குச் சேரும் முருகன், தன் அபார திறமையால் விஷ்ணுவர்தனுக்கு லாபம் ஈட்டித் தருகிறார். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத விஷ்ணுவர்தனின் மகன் அஸ்வின் (அருண் விஜய்), முருகன் மீது பகைகொள்கிறார். இதற்கிடையில், விஷ்ணுவர்தனின் மகள் மீராவுக்கும் (ஷாலினி பாண்டே) முருகனுக்கும் இடையே காதல் மலர்ந்து, திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.இந்த கட்டத்தில், எதிர்பாராத திடீர் திருப்பம் ஏற்படுகிறது. அந்த திருப்பத்தின் காரணமாக, அனைத்து வாய்ப்புகளையும் உதறிவிட்டு சொந்த கிராமத்திற்கே திரும்புகிறார் முருகன். அங்கே தன் தந்தையின் இட்லிக் கடையை மீண்டும் எடுத்து நடத்துகிறார். கிராமத்து மக்களுக்கு அந்தக் கடையின் மீதுள்ள பாசமும், முருகனை எப்படியாவது நாசமாக்கத் துடிக்கும் அஸ்வினின் சவால்களும் நிறைந்த இந்த கதை, இறுதியில் முருகன் நினைத்தது நடந்ததா, அஸ்வினை எப்படி எதிர்கொண்டார் என்பதைச் சொல்கிறது.டைட்டில் கிரெடிட்டிலேயே தான் சிறுவனாக இருந்தபோது கண்ட இடங்களையும், மக்களையும் அடிப்படையாகக் கொண்டே ‘இட்லி கடை’யை இயக்கியுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார். இயக்குநர் இந்தக் கதையை மிகவும் கவனமாகப் படமாக்கியிருக்கிறார். எனினும், திரைக்கதையில் பெரிய புதுமைகள் இல்லை.அன்பான பெற்றோர், குரூரமான வில்லன், பள்ளிப் பருவக் காதல், நேர்மையற்ற போலீஸ் (ஆனால் நல்ல இதயம் கொண்டவர்) போன்ற தமிழ் சினிமாவுக்கே உரித்தான கதாபாத்திரங்களை இந்தப் படத்தில் காணலாம். படத்தின் அடுத்தடுத்த நகர்வுகளை எளிதில் கணிக்கும்படி அமைந்திருந்தாலும், உணர்ச்சிகரமான பிணைப்பை ஏற்படுத்தியதில் தனுஷ் வெற்றி பெற்றிருக்கிறார். சமூக வலைதளங்களில் ‘இட்லி கடை’ படத்திற்கு நல்லவிதமான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, குடும்ப ஆடியன்ஸை இந்தப் படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது. சிறந்த வாழ்க்கையைத் தேடி சொந்த ஊரை விட்டு வெளியேறியவர்களையும், வெளியேற நினைப்பவர்களையும் இந்தப் படம் உணர்வுப்பூர்வமாக தொட்டிருப்பதாகப் பலரும் தெரிவித்துள்ளனர்.”ஆயிரம் தான் பை நிறைய சம்பாதித்தாலும், சொந்த ஊரில் கை நிறைய சம்பாதித்தாலே போதும்” என்கிற உணர்வை ஏற்படுத்தி, பார்வையாளர்களைத் தியேட்டரை விட்டு வெளியேற வைத்திருக்கிறார் இயக்குநர் தனுஷ். “சொந்த ஊரில் கொஞ்சமாக சம்பாதிப்பவர் ராஜாவாக வாழ்வது போன்றும், வெளியூரில் நிறைய சம்பாதிப்பவர் ஊரை நினைத்து ஏங்கியபடி வாழ்வது போன்றும் ரசிகர்கள் வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.”பெரிய ஹோட்டல் கிளைகள் வைத்து சம்பாதிக்க ஆசைப்பட்ட ஒருவன், பெரும் பணக்காரரின் மகள் கிடைத்தபோதும் அந்த ஆடம்பர வாழ்க்கையை வேண்டாம் என்று கூறி, கிராமத்து இட்லிக் கடை, கிராமத்துப் பெண் (நித்யா மேனனுடன் காதல்) என செட்டிலாகும் இந்த முடிவானது ரசிகர்களை ஈர்த்துள்ளது. படத்தில் ஆங்காங்கே குறைகள் இருந்தாலும், அவற்றை மறக்கடிக்கும் அளவுக்கு தனுஷின் நடிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, ‘இட்லி கடை’ தனுஷின் கெரியரில் ஒரு முக்கியமான படமாக அமைந்துவிட்டதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க, தனுஷின் மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் திரையரங்கிற்கு வந்திருந்தனர். அதே சமயம், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அருண் விஜய்யும் திரையரங்கிற்கு வந்த நிலையில், அருண் விஜய்யுடன் தனுஷின் மகன்கள் பேசும் வீடியோ வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version