இலங்கை
அபிவிருத்தி என்ற போர்வையில் மன்னாரில் நடக்கிறது இனஅழிப்பு; அருட்தந்தை சக்திவேல் அறிக்கை!
அபிவிருத்தி என்ற போர்வையில் மன்னாரில் நடக்கிறது இனஅழிப்பு; அருட்தந்தை சக்திவேல் அறிக்கை!
இன அழிப்பை அபிவிருத்தியின் போர்வையிலும் தொடரலாம் என்பதற்கு மன்னார் காற்றாலை மின் உற்பத்தித்திட்டம் நிகழ்கால உதார ணம் என்று சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியற்கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவர் நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
மன்னார் காற்றாலைத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை காலடியில் மிதித்து மக்களை அவமதித்துள்ளார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதிப் போராட்டம் நடத்திய மக்களை அவமானப்படுத்தி, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர் கனியவளம் மட்டும் அல்ல தமிழர்கள் நிலத்தை அபிவிருத்தி எனும் போர்வையில் அந்நிய சக்திகளுக்குக் கொடுக்க முனைவதும், அதற்கு அமைதி வழியில் எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்களை தாக்குவதும் மீண்டும் பழைய நிலையைத் தோற்றுவிக்கவா? என்று கேட்கத் தோன்றுகின்றது. தமிழர்கள் முன்வைக்கும் போர்க் குற்றங்களுக்கான நீதிக்கு அப்பால் அரச பயங்கரவாதப் படையினர் பலவந்தமாகக் கட்டிய விகாரைக்கு இதுவரை நீதி கிட்டவில்லை. கிழக்கின் மயிலத்தமடு மாதவனைப் பண்ணைப்
பணியாளர்களின் போராட்டத்திற்கு நீதி கிடைக்கவில்லை. மன்னார் காற்றாலை மற்றும் கனியவளம் அகழ்வு தொடர்பில் உறுதியளித்த நீதியை மறுப்பதும்
தமிழர்களுக்கு எதிரான அழிப்பே. தற்போதைய ஆட்சியாளர்களும் கடந்த காலத்தைப் போன்று சிங்கள பௌத்த பேரினவாத மனநிலையிலேயே ஆட்சியைத் தொடர்கின்றனர் என்பதையே அண்மைய சம்பவங்கள் உறுதிசெய்கின்றன. இதை அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்களின் பலத்துடன் தான் முறியடிக்க முடியும்.இனியும் காலம் தாமதிக்கக்கூடாது- என்றுள்ளது.