இந்தியா
அகழ்வாய்வு பணியில் ஈடுபட்ட அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் தற்போது இல்லை: அமர்நாத் ராமகிருஷ்ணன் கவலை
அகழ்வாய்வு பணியில் ஈடுபட்ட அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் தற்போது இல்லை: அமர்நாத் ராமகிருஷ்ணன் கவலை
சமூக நல்லிணக்க கலைத் திருவிழா புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் அக்டோபர் 3-ஆம் தேதி நடைபெற்றது. விழாவிற்கு புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலர் முனுசாமி தலைமை தாங்கினார். கலை விழாவில் பங்கேற்றவர்களை விழா ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சியப்பன் வரவேற்றார். சண்முகசுந்தரம்,நாகராஜன் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.விழாவின் துவக்க நிகழ்ச்சியாக “கீழடிக்குள் சிந்துவும்,சங்கமும்”, எனும் தலைப்பில், தொல்லியல்துறை இயக்குனர் அமர்நாத் ராமகிருஷ்ணன் உரை முனைவர் நா. இளங்கோ தலைமையில் நடைபெற்றது. அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசுகையில்:- தமிழகத்தின் முக்கிய நகரமாக இருந்த காஞ்சிபுரத்தில் அகழ்வாய்வு பணி 50 ஆண்டுகளுக்கு முன்பு 1970-ஆம் ஆண்டு முதல் 75-ஆம் ஆண்டு வரை நடைபெற்றது.காஞ்சி மாவட்டம் கட்சி மாநகரம் மற்றும் ஆன்மீக நகரம் என பல வகையில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்று கூறி வருகிறார்கள். 50 ஆண்டுகள் கடந்தும் இந்த அகழாய்வு பணி அறிக்கை இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. இந்திய தொல்லியல் துறை சிறு சிறு தகவல்களை மட்டும் வெளியிட்டுள்ளது. தற்போது தான் சென்னை பல்கலைக்கழகம் அந்த ஆய்வறிக்கையை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. அகழ்வாய்வு நடந்து 50 ஆண்டுகள் பின்பு இந்த அறிக்கையை வெளியிடுவதால் உண்மை தன்மை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அறிய வேண்டும். அகழ்வாய்வு பணியில் ஈடுபட்ட அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் தற்போது இல்லை.எனவே தான் அகழ்வாய்வு நடந்த உடனே அகழ்வாய்வு செய்தவர்கள் அந்த ஆய்வு அறிக்கை செய்தியை மக்களுக்கு உடனே தெரிவிக்க வேண்டும். அங்கு பௌத்த மதம் பின்பற்றி உள்ளதாக அகழாய்வுகள் தெரிவிக்கின்றது. இத்தகைய வரலாறுகளை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். மன்னர்கள் மட்டுமே வரலாறு என்பது இல்லை. மக்கள் தான் வரலாறு. பெரும்பாலான அகழ்வாய்வில் மக்கள் தான் வரலாறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.1945-ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள அரிக்கன்மேடு அகழாய்வு பணியை மேற்கொண்ட மார்ட்டீமர் வீலர், அகழாய்வு பணியை அறிவியல் பூர்வமாக எப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்று வழிகாட்டியவர். அவரின் கூற்றுப்படி தான் இன்றைக்கு நாம் அகழாய்வு பணியை கடைப்பிடித்து வருகிறோம். எனவேதான் அகழாய்வு பணியில் ஈடுபடும் அறிஞர்கள், ஆய்வாளர்கள் உண்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறுகிறோம் தவிர, அரசியல் நோக்கத்திற்காக அல்ல என்றார். முன்னதாக “அன்பே அறமெனெ எழுக” எனும் தலைப்பில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் உரை, விழா ஒருங்கிணைப்பாளர் மணி. கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து,” சாதி மதங்களைப் பாரோம்” என்ற தலைப்பில், பாவலர்,சு. சண்முகசுந்தரம் உரை நிகழ்த்தினார். “வெறுப்பின் கொற்றம் வீழ்க” எனும் தலைப்பில், கவிஞர்கள் மு பாலசுப்ரமணியன், தி.கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். கலைமாமணி பொன் .சண்முகம் குழுவினரின் நாதஸ்வர இன்னிசையும், பாரதியார் பல்கலைக்க கூட மாணவர்களின் இசையரங்கம், சப்தர் ஹஷ்மி குழுவினரின் இன்னிசையும், கலை மன்னன் கலைக்குழுவினரின் நாட்டுப்புற கலை வடிவங்களின் சங்கமமும், தவில் கலைஞர் வெ. விநாயகம் ஒருங்கிணைப்பில் தாளக்கருவிகளின் சங்கமமும், நடைபெற்றது. முனைவர் ஞா.கோபி இயக்கத்தில் யாழ் அரங்கம் வழங்கும்,” விழித்துக் கொள் நண்பா” என்னும் சமூக நாடகம் நடைபெற்றது.சமூக நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் வலியுறுத்த நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஆசிரியர் பச்சையம்மாள், உமா அமர்நாத் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனம், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சமூக நல்லிணக்க இயக்கம், புதுச்சேரி மாநில ஓய்வூதிய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, பி.எஸ்.என்.எல்., எல்.ஐ.சி . ஊழியர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இக்கலைத் திருவிழாவை நடத்தினர்.