இந்தியா

காரைக்கால் மீனவர்கள் கைது; உடனடியாக விடுவிக்க வேண்டும்: புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் கோரிக்கை

Published

on

காரைக்கால் மீனவர்கள் கைது; உடனடியாக விடுவிக்க வேண்டும்: புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் கோரிக்கை

புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆகியோருக்கு  அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி மீனவர்கள் 12 பேர் மீன்படிக்க கடலுக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவுக்கு அருகில் உள்ள இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி கடந்த செப்டம்பர் 28-ம் தேதி  அதிகாலையில் மீனவர்களை கைது செய்தனர். மேலும் மீனவர்கள் சென்ற ஒரு படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட படகும் சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை மீன்வள ஆய்வாளரிடம்  ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அக்டோபர் 15-ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.தமிழக மீனவர்கள், குறிப்பாக காரைக்கால், நாகப்பட்டினம், வேதாரண்யம் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள், மீன்பிடிக்கச் செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினரால் சித்திரவதைக்கு ஆளாகிறார்கள் என்பதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நன்கு தெரியும். மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கை அரசின் செயல்பாட்டிற்கு இந்திய அரசு பலமுறை கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும் மீனவர்கள் கைது மற்றும் படகுகள் பறிமுதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. கவனக்குறைவால் எல்லை மீறும் நமது மீனவர்கள் பெரும்பாலும் வேட்டைக்காரர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இலங்கை கடற்படையினரின் இந்த மாதிரியான அத்துமீறல் அணுகுமுறை நமது மீனவர்களை முற்றிலும் மனச்சோர்வடையச் செய்கிறது.இதன் விளைவாக நமது மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவே அச்சப்படுகின்றனர். இதனால் வருமானம் இன்றி அவர்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகின்றது. அவர்களது மீன்பிடி சாதனங்களும் முழுமையாக இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு, நம் தமிழ் மீனவர்கள் பெரும் பொருளாதார இழப்பிற்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 28-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ள காரைக்கால் மாவட்ட மீனவர் சம்பந்தமாக புதுச்சேரி மாநில மாண்புமிகு முதலமைச்சர் . ரங்கசாமி  வெளியுறவு அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அவர் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதால் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். எனவே, இந்த விஷயத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். இதே நிலை தொடர்ந்து நீடித்தால், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுக்கான இந்திய அரசு இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என புதுச்சேரி அதிமுக சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை என்றால், எந்த நேரத்திலும் அவர்களை விடுவிக்க எந்த விதமான சட்ட உதவியையும் நாடும் சாத்தியத்தை இந்திய அரசு ஆராய வேண்டும் என புதுச்சேரி அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version