பொழுதுபோக்கு
பக்தி தேவை இல்ல, கோவில் போக வேணாம்; ஆனா இது ரொம்ப முக்கியம்: க்ளாசிக் வில்லன் நம்பியார் த்ரேபேக் அட்வைஸ்!
பக்தி தேவை இல்ல, கோவில் போக வேணாம்; ஆனா இது ரொம்ப முக்கியம்: க்ளாசிக் வில்லன் நம்பியார் த்ரேபேக் அட்வைஸ்!
தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடிக்கட்டி பறந்தவர் எம்.என். நம்பியார். இவர் எம்.ஜி.ஆர் படங்களில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார். தனது வில்லத் தனத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தவர் நம்பியார். நாடகக் குழுவில் பயணித்து பின் ‘பக்த ராமதாஸ்’ எனும் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.ஆரம்ப காலத்தில் காமெடி நடிகராக இருந்த நம்பியாருக்கு ‘கஞ்சன்’ எனும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து, பல படங்களில் கதாநாயகனாக நடித்த நம்பியார் ஒரு கட்டத்தில் வில்லனாக நடிக்கத் தொடங்கினார். சிவாஜி, எம்.ஜி.ஆரின் பல படங்களில் நம்பியார் வில்லனாக நடித்திருப்பார்.வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். அதன் பிறகு முதுமைக் காலத்தில் நடிகர் நம்பியார் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். சரத்குமார், விஜய் படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.நடிகர் நம்பியார் பக்தி குறித்து பேசிய த்ரோபேக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியதாவது, ”பக்தி தேவை இல்லை, ஆனால் ஒழுக்கம் தேவை. ஒழுக்கம், கட்டுப்பாடுடன் இருப்பவனுக்கு பக்தி தேவை இல்லை. இதுதான் என்னுடைய கருத்து. கோயிலுக்கு போக வேண்டும் என்று நான் சொல்லமாட்டேன்.கோயிலுக்கு போவதற்கான நேரம் கிடைக்கும் பொழுது நான் கோயிலுக்குச் செல்வேன். எல்லா கோயில்களுக்கும் நான் செல்வதில்லை. மனசை ஒருமுகப்படுத்துவதற்கு நாம் முயற்சி செய்து அதில் வெற்றி பெற முடியும் என்றால் அதுதான் கோயில். நீங்கள் கோயிலுக்கு போக வேண்டியது இல்லை.ஆயிரக்கணக்கானோரின் மனது, எண்ணம் ஒரு கோயிலுக்கு போய் சேரும் பொழுது அந்த இடத்திற்கு ஒரு சக்தி உண்டாகுகிறது. அதை நாம் மறுக்க முடியாது. அந்த சக்தி உண்மையா, மனப்பூர்வமாக வேண்டுபவர்களுக்கு கிடைக்கும் என்பது என்னுடைய கருத்து. கடவுள் இருக்கிறாரோ? இல்லையோ மனிதனின் மனதிற்கு ஒரு பலம் இருக்கிறது அல்லவா. A post shared by மாண்புமிகு மக்கள் (@tamilpeople_offl)கடந்த 1942-ல் ஆழப்புலாவில் ஐயப்ப நாடகத்தை நடத்தி நாங்கள் சபரிமலைக்கு சென்றோம். அதற்கு முன்பு நான் சபரிமலைக்கு சென்றது இல்லை. அதன்பிறகு இன்று வரை சபரிமலைக்கு சென்று வருகிறேன். வேலைக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் விரதம் இருந்து போக முடிந்தால் சபரிமலைக்கு செல்வேன். ” என்றார்.முதன் முதலில் ஐயப்ப சரிதத்தை நாடகமாக்கிய நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையுடன் சபரிமலை புனித பயணம் மேற்கொண்ட நடிகர் நம்பியார். பலருக்கு குருசாமியாக இருந்திருக்கிறார். இவர் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலை சென்று வந்ததாக கூறப்படுகிறது.