இந்தியா
‘வன்முறைக்கு எதிரானவன், என் செயலுக்கு வருத்தப்படவில்லை’ தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் பேட்டி
‘வன்முறைக்கு எதிரானவன், என் செயலுக்கு வருத்தப்படவில்லை’ தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் பேட்டி
தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை நோக்கி காலணி வீசியதற்காக இந்திய வழக்கறிஞர் கவுன்சிலால் இடைநீக்கம் செய்யப்பட்ட வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், திங்கள்கிழமை தனது செயலுக்கு வருத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.ஆங்கிலத்தில் படிக்க:செவ்வாய்க்கிழமை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், கஜுராஹோவில் உள்ள ஜவாரி கோவிலில் விஷ்ணு சிலையின் அமைப்பை மீட்டெடுக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தபோது தலைமை நீதிபதி அளித்த கருத்துக்களால் தான் காயமடைந்ததாக ராகேஷ் கிஷோர் கூறினார்.“நான் வேதனையடைந்தேன். செப்டம்பர் 16-ம் தேதி தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு (PIL) தாக்கல் செய்யப்பட்டது. ‘சிலையின் தலையைப் புணரமைக்க வேண்டுமானால், போய் அந்த சிலையிடமே பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று கூறி நீதிபதி கவாய் அதை கேலி செய்தார்.”சட்டவிரோதமாக வேறொரு மதத்தால் நிலமோ அல்லது அமைப்போ ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பாகுபாடான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாகக் ராகேசஷ கிஷோர் குற்றம் சாட்டினார்.“ஹல்த்வானியில் ரயில்வே நிலத்தை ஒரு குறிப்பிட்ட சமூகம் ஆக்கிரமித்திருந்ததைப் போன்ற பிற மதங்களுக்கு எதிரான வழக்குகளை நாம் பார்க்கும்போது, அதை அகற்ற முயற்சிக்கும்போது, உச்ச நீதிமன்றம் 3 ஆண்டுகளுக்கு முன்பு அதற்குத் தடை விதித்தது. நூபுர் சர்மாவின் வழக்கில், ‘நீங்கள் சூழ்நிலையை கெடுத்துவிட்டீர்கள்’ என்று நீதிமன்றம் கூறியது. ஆனால், சனாதன தர்மம் தொடர்பான விஷயங்களில், ஜல்லிக்கட்டு ஆகட்டும் அல்லது கிருஷ்ண ஜெயந்தியின்போது நடத்தப்படும் உறியடி உயரம் ஆகட்டும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் என்னைக் காயப்படுத்தின.” என்று கூறினார்.நீதிமன்றம் நிவாரணம் வழங்க விரும்பவில்லை என்றால் கூட, குறைந்தபட்சம் அதைப் பரிகசிக்கக்கூடாது என்று ராகேஷ் கிஷோர் மேலும் கூறினார். “மனு தள்ளுபடி செய்யப்பட்டது ஒரு அநீதி. இருப்பினும், நான் வன்முறைக்கு எதிரானவன், ஆனால், எந்தக் குழுவுடனும் தொடர்பு இல்லாத ஒரு சாதாரண மனிதன் ஏன் இத்தகைய நடவடிக்கையை எடுத்தான் என்று நீங்கள் யோசிக்க வேண்டும். நான் எந்தப் போதைப்பொருளின் தாக்கத்திலும் இல்லை; இது அவரது செயலுக்கான எனது எதிர்வினை. நான் பயப்படவில்லை, எனக்கு எந்த வருத்தமும் இல்லை… நான் இதைச் செய்யவில்லை, கடவுள்தான் என்னைச் செய்ய வைத்தார்.” என்றார்.“… நான் காயமடைந்தேன்… நான் போதையில் இல்லை, இது அவரது செயலுக்கான எனது எதிர்வினை… நான் பயப்படவில்லை. நடந்ததற்கு நான் வருத்தப்படவில்லை” என்று அவர் கூறினார்.71 வயது ராகேஷ் கிஷோர் திங்கட்கிழமை காலை உச்ச நீதிமன்ற நடவடிக்கையின்போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை நோக்கி ஒரு காலணியை வீசியதாகக் கூறப்படுகிறது. தலைமை நீதிபதி, வழக்கறிஞர் மீது வழக்குத் தொடர வேண்டாம் என்று நீதிமன்றப் பதிவாளருக்கு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அன்று பிற்பகலில் போலீசார் அவரை விடுவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.எந்தவிதக் கலக்கமும் அடையாத தலைமை நீதிபதி, தன் மீதோ அல்லது தனது மேசையிலோ எதுவும் வந்து விழவில்லை என்று கூறினார். “நான் சத்தத்தை மட்டும்தான் கேட்டேன். ஒருவேளை அது ஏதோ ஒரு மேசையிலோ அல்லது வேறு எங்கோ விழுந்திருக்கலாம்” என்று அவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். மேலும், அவர் ‘நான் கவாய் சாப் மீதுதான் வீசினேன்’ என்று சொன்னதைத்தான் நான் கேட்டேன். ஒருவேளை அவர் வீசியது வேறு எங்கோ விழுந்திருக்கலாம், அதைத்தான் அவர் விளக்க முயன்றார்” என்றும் அவர் கூறினார்.இந்தச் சம்பவத்திற்குத் தனது முதல் பதிலில், நீதிபதி கவாய் தனக்கு முன் வாதிட்ட வழக்கறிஞரிடம் “அதைக் கண்டுகொள்ளாதீர்கள்” என்று கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். “இவற்றால் நான் கவனம் சிதறவில்லை. நீங்களும் கவனம் சிதறாமல் வழக்கை மேற்கொண்டு நடத்துங்கள்” என்று திங்கள்கிழமை மதியம் அவர் கூறினார். நீதிமன்ற அறை எண் 1-இல் வழக்குகள் குறிப்பிடப்படும் நேரத்தில் நடந்த அந்தச் சம்பவத்திற்கான தனது உடனடிப் பதிலைப் பற்றி அவர் நினைவு கூர்ந்தார்.