இந்தியா
நக்கல், நையாண்டியோடு பேசுவதை அமைச்சர் நமச்சிவாயம் நிறுத்திக் கொள்ள வேண்டும்: புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ எச்சரிக்கை
நக்கல், நையாண்டியோடு பேசுவதை அமைச்சர் நமச்சிவாயம் நிறுத்திக் கொள்ள வேண்டும்: புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ எச்சரிக்கை
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம், சாய்சரவண குமாரின் விமர்சனம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த நமச்சிவாயம் அமைச்சர் பதவி இல்லாத விரக்தியில் சாய் சரவணன் குமார் அபத்தமாக பேசுவதாக குற்றம் சாட்டினார்.இந்த நிலையில் இன்று (08.10.2025) சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த சாய் சரவணன் குமார் எம்.எல்.ஏ., “சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக உள்துறை அமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என்று எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை, சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் கேள்வி கேட்கிற உரிமையை இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கி உள்ளது.ஏன் கேள்வி எழுப்பினீர்கள் என்று கேட்கும் அதிகாரம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே இல்லை என்பதை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.இந்திய நாட்டின் முதல் குடிமகனுக்கும் ஒரு ஓட்டு தான் சாதாரண சாமானியனுக்கும் ஒரு ஓட்டு தான், நமச்சிவாயத்திற்கும் ஒரு ஓட்டு தான் சாய் சரவண குமாருக்கும் ஒரு ஓட்டு தான் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.“இந்திய நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை, என்னை அமைச்சர் ஆக்கியது பாரதிய ஜனதா கட்சி” என்று குறிப்பிட்ட அவர், “அமைச்சர் பதவி என்பது எங்க அப்பா வீட்டு பதவி இல்லை மக்களுக்கு சேவை செய்வது. அமைச்சர் பதவியில் இல்லை என்பது பற்றி தான் ஒரு நாள் கூட வருத்தப்படவில்லை. நரேந்திர மோடி மந்திரியாக இரு என்றாலும் பணி செய்வேன், எம்.எல்.ஏ-வாக இரு என்றாலும் பணி செய்வேன்” என்று காட்டமாக தெரிவித்தார். “நான் ஜெயிச்சுடுவேன், நான் ஜெயிச்சுடுவேன் என்று சொல்லி 30 தொகுதிகளுக்கும் பிரச்சாரம் சென்று குறைவான ஓட்டுகளை வாங்கி நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தவுடன், பெருந்தலைவர் காமராஜர் போன்று தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சியை வலுப்படுத்த சென்று இருக்க வேண்டும். அப்படி செய்துவிட்டு தன்னை பற்றி அவர் விமர்சனம் செய்திருந்தால் நான் அதை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், அப்படி செய்யாமல் தன்னை மட்டும் விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம்” என்று சாய் சரவணன் குமார் கூறினார்.“நாட்டுக்காக தியாகம் செய்த கட்சிதான் பாரதிய ஜனதா, ஒரு பொறுப்புள்ள அமைச்சராக நமச்சிவாயம் பேச வேண்டும் நக்கல் நையாண்டி தனம் எல்லாம் செய்யக்கூடாது” என்று கடுமையாக சாடிய சாய் சரவணன் குமார், “பொறுப்பை உணர்ந்து கடமை உணர்ந்து பேச வேண்டும்” என்று சாய் சரவணன் குமார் வலியுறுத்தினார். “தீவிரவாதத்தையும் வன்முறையையும் அடியோடு ஒழிப்பது தான் பாரதிய ஜனதா கட்சி, இதுபோன்று பேசுவதை விட்டுவிட்டு மக்களுக்காக அவர் செயல்பட வேண்டும், இதோடு நிறுத்திக்கொண்டால் நல்லதாக இருக்கும்” என்று எச்சரிக்கை விடுத்த சாய் சரவணன் குமார், “மாநில வளர்ச்சிக்காக பணிகளை செய்வோம் வாழ்க பாரதம்” என்றார்.போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் செல்வதற்கு டி.ஜி.பி பாதுகாப்போடு செல்கிறார் மக்களை பாதுகாக்க வேண்டிய டி.ஜி.பி-க்கு எதற்கு பாதுகாப்பு என்று கேள்வி எழுப்பிய அவர், வெளியூர் செல்லும் போது வேண்டுமானால் பாதுகாப்பு உள்ளூரில் தேவை இல்லை அதை எல்லாம் விளக்கி விட்டு மக்கள் பணி செய்ய அவர்கள் முன் வரவேண்டும் எனவும் சாய் சரவணன் குமார் கேட்டுக்கொண்டார்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி