இந்தியா
ம.பி-யில் குழந்தைகளைக் கொன்ற இருமல் சிரப்: மூடப்பட்ட தமிழக ஆலையில் 364 விதிமீறல்கள் கண்டுபிடிப்பு
ம.பி-யில் குழந்தைகளைக் கொன்ற இருமல் சிரப்: மூடப்பட்ட தமிழக ஆலையில் 364 விதிமீறல்கள் கண்டுபிடிப்பு
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் 14 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான ‘கோல்ட்ரிஃப் சிரப்’ (Coldrif Syrup) தயாரிக்கப்பட்ட, ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஸ்ரீசன் பார்மசூட்டிகல் உற்பத்தியாளர் (Sresan Pharmaceutical Manufacturer) நிறுவனம் பூட்டப்பட்டு, தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ஆலை, அவசரமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. உள்ளே பிளாஸ்டிக் குடுவை, ரசாயன கறைகள் படிந்த தளங்கள், ஆங்காங்கே கிடக்கும் குழாய்கள் என ஊழியர்கள் அவசரமாக வெளியேறியதற்கான தடயங்கள் உள்ளன. சிறு ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது, உற்பத்தி நிலையம் மிகவும் அசுத்தமாகவும், சுகாதாரமற்றதாகவும் இருப்பது தெரியவருகிறது. ஆலை சுவரில் வெள்ளையும் நீலமும் கலந்த பிளாஸ்டிக் கொள்கலன்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன; சிலவற்றில் இரசாயனக் கறைகள் ஒட்டி உள்ளன. தரையில் வாளிகள், உலோக சட்டங்கள் மற்றும் மூடியற்ற பெரிய டிரம்ஸ்கள் சிதறி கிடக்கின்றன.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கபின்புறத்தில், சாம்பல் மற்றும் குப்பைகளுக்கு மத்தியில், ப்ரோனிக் இரும்பு சிரப் (Pronic Iron Syrup), 200 மிலி அளவுள்ள சைப்ரோஹெப்டடைன் ஹைட்ரோகுளோரைடு சிரப் பாட்டில்களின் பாதி எரிந்த லேபிள்கள் திறந்தவெளியில் கிடக்கின்றன. லிக்விட் குளுக்கோஸ் நிரப்பப்பட்ட நீல நிறப் பேரல்கள் (300.80 கிலோ) அங்கே இருந்தன. அவற்றை ஜூன் 2025-ல் தயாரித்து ஜூன் 2027-ல் காலாவதியாகும் என்று லேபிள்கள் தெரிவிக்கின்றன.பக்கத்தில் வசிக்கும் சரவணன், காலை 9.30 மணியளவில் பச்சை சீருடையில் 10 பெண் ஊழியர்கள் உள்ளே சென்று மாலை 5 மணிக்குத் திரும்புவதைக் கண்டதாகத் தெரிவித்தார். “லைசென்ஸ் டிசம்பரில் காலாவதியாவதால் ஆலை மூடப்படும் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்,” என்றார். இந்த ஆலை சுமார் 13 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவதாகவும், வெளியாட்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்றும் அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.கடந்த செவ்வாய்க்கிழமை, தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை, ஆலையின் நீலச் சுவரில் 2 தனித்தனி விளக்கம் கோரும் நோட்டீஸ்களை (Show-Cause Notices) ஒட்டியுள்ளது. நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ஜி. ரங்கநாதன் மற்றும் பகுப்பாய்வு வேதியியலாளர் கே. மகேஸ்வரி ஆகியோருக்கு இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.நோட்டீஸில் உள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்:தரமற்ற தயாரிப்பு (Not of Standard Quality): ஆய்வகப் பரிசோதனையில், சிரப் மாதிரியில் டயெத்திலீன் கிளைகால் (Diethylene Glycol) (48.6% w/v) என்ற விஷத்தன்மை கொண்ட பொருள் கலப்படம் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.பிழையான வணிக முத்திரை (Misbranding): சிரப் லேபிள்களில், “4 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சேர்க்கை மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது” என்ற கட்டாய எச்சரிக்கை இடம்பெறவில்லை.விதிமீறல்களுக்கு ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று 5 நாட்களுக்குள் விளக்கமளிக்க ரங்கநாதனுக்கும் மகேஸ்வரிக்கும் நோட்டீஸ் உத்தரவிட்டுள்ளது. மேலும், விற்பனை செய்யப்பட்ட அனைத்து மருந்துகளையும் திரும்பப் பெறவும், விநியோகப் பதிவுகள் மற்றும் மூலப்பொருட்கள் வாங்கியதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரங்கநாதனும், மகேஸ்வரியும் தற்போது கருத்துத் தெரிவிக்கக் கிடைக்கவில்லை.மத்தியப் பிரதேச மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் கடிதத்தின் அடிப்படையில் தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை நடவடிக்கை எடுத்தது. தமிழக மருந்து ஆய்வாளர்கள் ஆலையில் ஆய்வு நடத்தியபோது, அங்கே 364 விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. முக்கிய உற்பத்திப் பகுதிகளில் சுவர்கள், தரை மற்றும் கூரைகளில் விரிசல்கள், மாசு தடுப்புக்குரிய காற்றைச் சுத்தம் செய்யும் வசதி இல்லாதது, கதவுகள் அலுமினியத்தால் ஆனது போன்ற குறைபாடுகள் இருந்தன.பொருட்கள் அனைத்தும் ஒரே அறையில் பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் விரிசல் கண்ட உபகரணங்களைப் பயன்படுத்தி கலக்கப்பட்டன. சில மூலப்பொருட்களைக் கரைக்க வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டது. மருந்து புகார்களை ஆய்வு செய்யவோ (அ) பொருட்களை திரும்பப் பெறவோ எந்த அமைப்பும் இங்கு இல்லை. மருந்து தரத்தை உறுதிப்படுத்தும் விதிகள் மற்றும் மூலப்பொருட்களான புரோப்பிலீன் கிளைகால் வாங்கியதற்கான பதிவுகள் இல்லை.ரங்கநாதன் அக்டோபர் 27, 2011 அன்று உற்பத்தி உரிமத்தைப் பெற்றுள்ளார். இது 2026 வரை செல்லுபடியாகும். அவர் 1990-ல் பதிவு செய்யப்பட்டு, 2009-ல் மூடப்பட்ட ஸ்ரீசன் பார்மசூட்டிகல் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குநராக இருந்துள்ளார். பழைய நிறுவனம் மூடப்பட்ட அதே ஆண்டில், இவர் ஸ்ரீசன் பார்மசூட்டிகல் உற்பத்தியாளர் என்ற தனி உரிமையாளர் நிறுவனத்தைத் தொடங்கி, விற்பனை உரிமம் பெற்றதாகக் கூறப்படுகிறது.ஊழியர்களின் போதிய பயிற்சி மற்றும் போதுமான உள்கட்டமைப்பு இல்லாமல் இந்த ஆலை செயல்பட்டு வந்தது என்று மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். 2009 இல் மூடப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர்கள் குறித்து மத்தியப் பிரதேச சிறப்புக் காவல்துறையும் விசாரித்து வருகிறது. இந்த ஒரு சிறிய உற்பத்தி நிறுவனத்தில் “350-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய விதிமீறல்கள்” இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.