இந்தியா
அமெரிக்கா-சீனா வர்த்தக போர் உச்சம்: சீனப் பொருட்களுக்குக் கூடுதலாக 100% வரி விதித்தார் டிரம்ப்
அமெரிக்கா-சீனா வர்த்தக போர் உச்சம்: சீனப் பொருட்களுக்குக் கூடுதலாக 100% வரி விதித்தார் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவை இலக்காகக் கொண்ட புதிய, கடுமையான வர்த்தக நடவடிக்கையை வெள்ளிக்கிழமை அறிவித்து உள்ளார். உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக பதற்றத்தை இந்த முடிவு உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. டிரம்பின் அறிவிப்பின்படி, நவ.1 முதல் அனைத்து சீன இறக்குமதி பொருட்கள் மீதும் கூடுதலாக 100% வரிவிதிக்கப்படும். மேலும், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அனைத்து முக்கிய மென்பொருட்கள் (critical software) மீதும் கடுமையான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.உலகின் இரு பெரும் பொருளாதார வல்லரசுகளுக்கு இடையே நிலவும் வர்த்தக பதற்றத்தை இந்த நடவடிக்கை மேலும் அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது சமூக வலைதளமான ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் இது குறித்துப் பதிவிடுகையில், வர்த்தகத்தில் சீனா ஒரு “அசாதாரணமான ஆக்ரோஷமான” நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்றும், அமெரிக்கா அதற்குத் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்தார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க”நவ.1 முதல் (அல்லது சீனா எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்து முன்னதாகவும் இருக்கலாம்), அமெரிக்கா, சீனா தற்போது செலுத்தும் 30% வரி உடன் கூடுதலாக 100% வரியை விதிக்கும். மேலும், நவம்பர் 1 முதல் அனைத்து முக்கியமான மென்பொருட்கள் மீதும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்போம்,” என்று டிரம்ப் உறுதிப்படுத்தினார். சீனா தனது அனைத்துப் பொருட்களுக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டு உள்ளதாகவும், உலக நாடுகளுக்கு இதுதொடர்பாக “விரோதமான கடிதத்தை” அனுப்பியுள்ளதாகவும் கிடைத்த தகவல்களே இந்த நடவடிக்கைக்கு காரணம் என டிரம்ப் சுட்டிக்காட்டினார். சீனாவின் இந்த நடவடிக்கையை சர்வதேச வர்த்தகத்தில் கேள்விப்படாதது என்றும், மற்ற நாடுகளுடன் நடந்துகொள்வதில் இது ஒரு “தார்மீக அவமானம்” என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.சி ஜின்பிங்குடனான சந்திப்பு ரத்தாகலாம்இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் சி ஜின்பிங்குடனான தனது திட்டமிடப்பட்ட சந்திப்பை ரத்து செய்யப்போவதாகவும் மறைமுகமாக அச்சுறுத்தியுள்ளார். 2 வாரங்களில் தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் (APEC) நான் அதிபர் சி-ஐ சந்திக்க வேண்டியிருந்தது, ஆனால் இப்போது அவ்வாறு செய்வதற்கு எந்த காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று அவர் தனிப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.”அவர்கள் (சீனா) அரிய வகை தனிமங்கள் மற்றும் உற்பத்தி தொடர்பான கிட்டத்தட்ட அனைத்தின் மீதும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்க விரும்புவதாக உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு கடிதங்களை அனுப்பி மிகவும் விரோதமாக மாறி வருகிறார்கள். இப்போது எந்த காரணமும் இல்லாததால், அதிபர் சி-ஐ நான் இதுவரை பேசவில்லை,” என்றும் டிரம்ப் தெரிவித்தார். டிரம்ப்பின் இந்த புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகள், இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை மேலும் பாதிக்கக்கூடும் என்று வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்.