தொழில்நுட்பம்
ஐந்தல்ல… 10 மாடிக் கட்டிட உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகள்: புயலின் ரகசியத்தை உடைத்த கூகிள் செயற்கைக்கோள்கள்!
ஐந்தல்ல… 10 மாடிக் கட்டிட உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகள்: புயலின் ரகசியத்தை உடைத்த கூகிள் செயற்கைக்கோள்கள்!
கடற்கரைக்குச் சென்று கடல் அலை பார்த்திருப்பீர்கள். ஆனால், ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட 5 பெரிய ஒட்டக சிவிங்கிகளின் உயரத்திற்குச் சமமான கடல் அலையை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? கிட்டத்தட்ட 20 மீட்டர் (65 அடி) உயரம்! ஆம், நம்ப முடியாத இந்த ராட்சத அலைகளை, பிரெஞ்சு-அமெரிக்க கூட்டு செயற்கைக்கோளான SWOT பதிவு செய்துள்ளது. டிச.21, 2024 அன்று ஏற்பட்ட எட்டி புயலின்போது இந்த அலைகள் உருவாகி, விண்வெளியில் இருந்து இதுவரை அளவிடப்பட்டதிலேயே மிகப்பெரிய அலை என்ற சாதனையைப் படைத்துள்ளன.இந்த அசாதாரண ஆய்வு, புயல்கள் கடலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த பல ரகசியங்களை உடைத்துள்ளது. இந்த பிரம்மாண்டமான அலைகள் விஞ்ஞானிகள் ‘தூதுவர்கள்’ என்றழைக்கிறார்கள். ஏனென்றால், புயல் கரையோரத்தைத் தொடாமலேயே, அதன் அழிவுகரமான ஆற்றலை இவை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவுக்கு கடத்திச்செல்கின்றன. புயல் மையத்தில் அலைகள் உச்சத்தில் இருந்தாலும், தொலைதூர கடற்கரைகளுக்கு உண்மையான ஆபத்தை ஏற்படுத்துவது, புயல் மையத்திலிருந்து வெளிப்புறமாகப் பரவி வரும் இந்த அலைகளின் பெருக்கமே ஆகும்.ஒரு புயலின் உண்மையான உள் சக்தி எவ்வளவு என்பதை அதன் ‘அலைவு நேரம்’ (Wave Period) மூலம் கண்டறியலாம். அதாவது, அடுத்தடுத்து வரும் அலை முகடுகளுக்கு இடையேயான நேரம். உதாரணமாக, 20 வினாடி அலைவு நேரம் என்பது, மிகப்பாரிய அலைகள் மிகத் துல்லியமான இடைவெளியில் வந்தடையப் போகின்றன என்பதை எச்சரிக்கிறது. பிரான்சின் ஆய்வுக் குழுவினர், SWOT செயற்கைக்கோள் தரவுகளுடன், SARAL, ஜேசன்-3, சென்டினல் போன்ற பல செயற்கைக்கோள்களின் பல தசாப்தகால தரவுகளையும் (ESA CCI திட்டத்தின் கீழ்) இணைத்து இந்த மகத்தான ஆய்வைச் செய்துள்ளனர்.வடக்கு பசிபிக் முதல் அட்லாண்டிக் வரை சுமார் 24,000 கி.மீ தூரத்திற்கு இந்த ராட்சத அலைகள் பரவியுள்ளதை இந்த ஆய்வு குழு படம்பிடித்துள்ளது. விஞ்ஞானிகள் நீண்ட காலமாக, கடலில் நீண்ட தூரம் பயணிக்கும் ‘நீண்ட அலைகள் (swells)’ தான் அதிக ஆற்றலை எடுத்துச் செல்கின்றன என்று நம்பி வந்தனர். ஆனால், செயற்கைக்கோள் தரவுகள் இதற்குச் சவால் விடுத்துள்ளன! மிக நீண்ட அலைகளைவிட, புயலின் உச்சத்தில் உருவாகும் அலைகளிலேயே (Peak Storm Waves) உண்மையான ஆற்றல் செறிவுகள் மிக அதிகமாக உள்ளன என்பதை இந்த ஆய்வுகள் நிரூபித்துள்ளன.இந்தத் தகவல்கள் காலநிலை மாதிரிகளை மேலும் துல்லியமாக்கவும், முன்னறிவிப்புகளைச் செம்மைப்படுத்தவும் உதவுகின்றன. தற்போது, கோப்பர்நிக்கஸ் சென்டினல்-6 செயற்கைக்கோள், கடலோரப் பகுதிகளின் அன்றாட முன்னறிவிப்புகளுக்காக, அலை உயரம் மற்றும் காற்றின் வேகம் பற்றிய நேரலை (Near-real-time) அளவீடுகளை வழங்குகிறது.காலநிலை மாறி, தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிக்கும் இக்காலகட்டத்தில், கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும், முக்கிய கட்டுமானங்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதில் இந்தத் தொழில்நுட்பம் ஒரு ‘விஸ்வரூப பாதுகாப்பை’ வழங்குகிறது. தொலை உணர்தல் (Remote Sensing) துறையின் இந்தச் சாதனைகள், பூமியின் மிகக் கொந்தளிப்பான அலைகளின் பிறப்பு, அளவு மற்றும் தாக்கம் குறித்து நாம் புரிந்து கொள்வதில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.