இந்தியா
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக புதுச்சேரி முதல்வரின் செயல்பாடு: வைத்தியலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக புதுச்சேரி முதல்வரின் செயல்பாடு: வைத்தியலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு
உச்ச நீதிமன்ற நீதிபதியை அவமதித்த வழக்கறிஞர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை முன்பு இன்று நடைபெற்றது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசுகையில், “உச்சநீதிமன்ற நீதிபதி அவமதிக்கப்பட்டது இந்த நாட்டிற்கே அவமானம். இதே நிலை மோடிக்கு ஏற்பட்டிருந்தால் இந்த நேரம் குற்றவாளிகளை தூக்கிலிட்டு இருப்பார்கள். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அரங்கேறி வருகிறது, பாலியல் புகாருக்கு ஆளான பேராசிரியரை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு வழக்கு போடப்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தவறு செய்த பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கூட்டணி கட்சிகளை ஒன்று திரட்டி பல்கலைக்கழகத்தில் உள்ளே நுழையும் போராட்டத்தில் ஈடுபடுவோம். தீபாவளி தொகுப்பு 10-ம் தேதிக்குள் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறியிருந்தார். அது எந்த பத்தாம் தேதி என்று தெரியவில்லை. பள்ளி கல்லூரி அருகிலேயே ரெஸ்டோபார் திறக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால் தற்போது வேளாண் கல்லூரி அருகே பார் திறந்து இருக்கிறார்கள். அவர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினர். தாழ்த்தப்பட்ட சமூகத்தை கேவலப்படுத்துவது தான் பா.ஜ.க-வின் கொள்கை. இன்று சாய் சரவணகுமாருக்கு ஏற்பட்ட நிலைமைதான் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஏற்படும். ரங்கசாமி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி.