இந்தியா
புதுச்சேரி பல்கலை. பாலியல் புகார்; போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்: நீதி விசாரணைக்கு வலியுறுத்தல்
புதுச்சேரி பல்கலை. பாலியல் புகார்; போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்: நீதி விசாரணைக்கு வலியுறுத்தல்
புதுச்சேரி: பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடத்திய புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (11.10.2025) வெளியிட்டுள்ள அறிக்கை:பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி பல்கலை. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், மாணவர்கள் மீது போலீசார் தடியடி. pic.twitter.com/oyOfsWJ0pwநடந்தது என்ன?புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பணி புரியும் இரு பேராசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் குற்றமிழைத்தப் பேராசிரியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கடந்த 09.10.2025 அன்று பல்கலைக்கழக மாணவ மாணவியர், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி பாலியல் புகார்களை விசாரிக்கும் குழு அமைக்க வேண்டுமெனவும் நள்ளிரவு வரை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.போலீஸ் தாக்குதல் மற்றும் கைது:போராட்டம் நடத்திய மாணவ மாணவியர் மீது காலாப்பட்டு போலீசாரும் கமாண்டோ படையினரும் தடியடி நடத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒரு போலீஸ்காரர் மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைத்த வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.மேலும், 6 மாணவிகள், 18 மாணவர்கள் என மொத்தம் 24 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்த போலீசார், இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். பின்னர், அனைவரையும் பிணையில் வெளியே விட்டுள்ளனர்.கூட்டமைப்பின் முக்கிய கோரிக்கைகள்:மாணவ மாணவியர் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் குறித்து ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்குப் புதுச்சேரி அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.மாணவ மாணவியர் மீது போடப்பட்டுள்ள குற்ற வழக்கை அரசு திரும்பப் பெற வேண்டும்.பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும், மேலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியர்களைப் பாதுகாத்து வருவதே போராட்டத்திற்குக் காரணம் எனவும், இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு விரிவான புகார் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கோ.சுகுமாரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி