இந்தியா
அமெரிக்காவில் இந்திய மாணவர் வருகை 44% சரிவு: கொரோனா தொற்றுக்குப் பிறகு மோசமான வீழ்ச்சி
அமெரிக்காவில் இந்திய மாணவர் வருகை 44% சரிவு: கொரோனா தொற்றுக்குப் பிறகு மோசமான வீழ்ச்சி
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் செமஸ்டர் தொடங்குவதற்கு முன்னதாக, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவிற்கு வந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, கொரோனா பெருந்தொற்று நோய்க்கு பிந்தைய (2020) மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 44% அதிகமான வீழ்ச்சியாகும்.அமெரிக்க வர்த்தகத் துறையின் கீழ் உள்ள அரசு நிறுவனமான சர்வதேச வர்த்தக நிர்வாகம் (International Trade Administration) பராமரிக்கும் தரவுகள் படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 41 ஆயிரத்து 540 இந்தியர்கள் மாணவர் விசாக்களில் (F மற்றும் M பிரிவுகள்) அமெரிக்கா வந்துள்ளனர். இது 2020 ஆம் ஆண்டில், பயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோது ஏற்பட்ட வருகைக்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க2023 ஆகஸ்ட் மாதத்தில் 93,833 ஆக இருந்த வருகை, 2024 ஆகஸ்ட் மாதத்தில் 74,825 ஆக குறைந்தது. 2022-ல் 80,486 ஆகவும், 2021-ல் 56,000 க்கும் அதிகமாகவும் இருந்தது. கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர், ஒபாமா நிர்வாகத்தின் கடைசி 2 ஆண்டுகளில் (ஆகஸ்ட் 2015-ல் 49,797, ஆகஸ்ட் 2016-ல் 44,722) இந்த ஆகஸ்ட் மாத வருகையை விட இந்திய மாணவர்களின் வருகை அதிகமாக இருந்தது. டிரம்ப் நிர்வாகத்தின் முதல் ஆண்டில் (2017 ஆகஸ்ட்) அது 41,192 ஆகக் குறைந்தது, மேலும் 2018, 19-ம் ஆண்டுகளில் 41,000-ஐ ஒட்டியே இருந்தது. செமஸ்டர் ஆகஸ்ட்/செப்டம்பரில் தொடங்குவதால், மாணவர் விசாக்களில் வருகை வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் உச்சத்தை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலும் இந்திய மாணவர்களின் வருகை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 40% அதிகமாக குறைந்து உள்ளது. இந்த 2 மாதங்களின் எண்ணிக்கையும் 2022-க்கு பிறகு மிகக் குறைவானது. ஜூலை: கடந்த ஆண்டு 24,298 ஆக இருந்த வருகை, இந்த ஆண்டு 13,027ஆகக் குறைந்தது.ஜூன்: கடந்த ஆண்டு 14,418 ஆக இருந்த வருகை, இந்த ஆண்டு 8,545 ஆகக் குறைந்தது.இதன் விளைவாக, இந்த ஆண்டு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் மொத்த இந்திய மாணவர்களின் வருகை 63 ஆயிரத்து 112 ஆக இருந்தது, இது தொற்றுநோய்க்குப் பிறகு இந்த மாதங்களில் மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.இந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவிற்கு 86,647 சீன மாணவர்கள் வந்துள்ளனர், இது இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகம். சீனாவிலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் (98,867) ஒப்பிடும்போது வருகை குறைந்திருந்தாலும், அதன் வீழ்ச்சி அவ்வளவு தீவிரமாக இல்லை. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மொத்த சீன மாணவர்களின் வருகை 1.11 லட்சம் ஆகும். 2023–24 கல்வியாண்டில், அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய சர்வதேச மாணவர் குழுவாக இந்திய மாணவர்கள் சீன மாணவர்களை முந்திச் சென்றனர் என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.இந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவிற்கு வந்த மொத்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 3.13 லட்சம் ஆகும், இது கடந்த ஆண்டு ஆகஸ்டில் இருந்த 3.87 லட்சத்திலிருந்து 19% குறைவாகும். இது கோவிட் ஆண்டுகள் தவிர்த்து, கடந்த 10 ஆண்டுகளில் குறைவான எண்ணிக்கையாகும்.இந்த மாணவர் வருகை குறைவிற்குப் பின்னால், டிரம்ப் நிர்வாகத்தின் சில நடவடிக்கைகளும் காரணமாகச் சொல்லப்படுகிறது. பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் மற்றும் சட்ட அமலாக்கம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாணவர்களின் விசாக்கள் இரத்து செய்யப்பட்டன.மே-ஜூன் மாதங்களில் சில வாரங்களுக்கு மாணவர் விசா விண்ணப்பங்களுக்கான நேர்காணல்கள் நிறுத்தப்பட்டு, விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகச் செயல்பாடுகளை கடுமையாகப் பரிசோதிக்க உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்கத் தூதரகங்கள் மாணவர் விசா விண்ணப்பதாரர்களை தங்கள் சமூக ஊடகக் கணக்குகளைப் பொதுவில் வைக்கக் கோரியிருந்தன.டிரம்ப் நிர்வாகம் வருவதற்கு முன்பே கூட, மாணவர் விசா விண்ணப்பங்களை நிராகரிப்பது அதிகரித்துள்ளது. அக்டோபர் 2023 முதல் செப்டம்பர் 2024 வரை, 41 சதவீத F-1 மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன, இது ஒரு தசாப்தத்தில் மிக உயர்ந்த வீதமாகும். சர்வதேச மாணவர் வருகையில் ஏற்பட்டுள்ள குறைவு, பல பல்கலைக்கழகங்கள் போராடி வரும் ஃபெடரல் நிதிக் குறைப்புகளுக்கு மத்தியிலும் வந்துள்ளது.சர்வதேச வர்த்தக நிர்வாகத்தின் தேசிய பயண மற்றும் சுற்றுலா அலுவலகம் (National Travel and Tourism Office) இந்த வருகை தரவுகளை நிர்வகிக்கிறது. இது அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையால் (US Customs and Border Protection) வருகையின்போது பராமரிக்கப்படும் பதிவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.