இந்தியா

பேராசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு: புதுவைப் பல்கலைக்கழகப் போராட்டம் திசை திருப்பப்பட்டது ஏன்? ஓஎஸ்டி மாற்றம் செய்யப்பட தி.மு.க. வலியுறுத்தல்!

Published

on

பேராசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு: புதுவைப் பல்கலைக்கழகப் போராட்டம் திசை திருப்பப்பட்டது ஏன்? ஓஎஸ்டி மாற்றம் செய்யப்பட தி.மு.க. வலியுறுத்தல்!

புதுவைப் பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பயிலும் மாணவி ஒருவர் பேராசிரியர் மீதான பாலியல் தொல்லை குறித்து அழுதபடியே பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர்.இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்து, தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அடங்கிய குழு, கடந்த செப்டம்பர் 29, 2025 அன்று முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர். மேலும், துணைநிலை ஆளுநருக்கும் தி.மு.க. சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டது.இந்நிலையில், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாலியல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட உள் புகார் குழுவை (Internal Complaints Committee) மறுசீரமைக்கவும் வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கடந்த அக்டோபர் 9, 2025 அன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.மாணவர்களின் இந்தப் போராட்டம், பல்கலைக்கழகத்தின் சிறப்பு பாதுகாப்பு பணி அதிகாரியான (Officer on Special Duty – OSD) எஸ்.பி. வம்சிதரெட்டியின் நிர்வாகத் திறமையின்மையால் சர்ச்சையாகி, மிகப்பெரிய அளவில் பூதாகரமாக மாறியுள்ளதாக தி.மு.க. குற்றஞ்சாட்டியுள்ளது.09.10.2025 மதியம் 1.30 மணிக்குத் தொடங்கிய மாணவர்களின் போராட்டத்தை இரவு வரை நீட்டிக்கப் பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டே இழுபறி செய்தது என்றும், பதிவாளரும் துணை வேந்தரும் வளாகத்திலிருந்து தப்பித்துச் செல்ல OSD வம்சிதரெட்டி உறுதுணையாக இருந்தார் என்றும் தி.மு.க.வின் மாநில மகளிரணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு அலுவலராக (OSD) நியமிக்கப்பட்டுள்ள வம்சிதரெட்டி, முன்னாள் சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி.யாகப் பணியாற்றியவர். மேற்கு சரகத்தின் எஸ்.பி.யாக இருந்த இவர், ரவுடிகள் தடுப்புப்பிரிவின் (Anti Rowdy Squad – ARS) எஸ்.பி.யாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது. துணை வேந்தருடனான சந்திப்பை ஏற்படுத்தித் தருவதாக மாணவர்களுக்கு உறுதியளித்த ஓஎஸ்டி, நிர்வாகத்தினர் வெளியேற உதவியதால், அவர் மீதான நம்பகத்தன்மை மாணவர்களுக்குச் சிதைந்தது. இதனால், ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு வெளியேறாமல் தடுத்துள்ளனர்.இந்தச் சூழ்நிலையில், ஓஎஸ்டியின் புகாரின் பேரில் காலாப்பேட்டை மற்றும் கிழக்கு சரகக் காவலர்கள் வரவழைக்கப்பட்டு, மாணவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ஒரு மாணவரின் முடியைப் பிடித்து இழுத்து, ஷூ காலால் எட்டி உதைத்துத் தாக்கி 25 மாணவர்களை இரண்டு காவல் வேன்களில் ஏற்றியுள்ளனர். மாணவர்கள் மீதான சட்ட நடவடிக்கைக்கு OSD வம்சிதரெட்டியின் புகாரும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி நடத்தப்பட்ட போராட்டம், தற்போது காவல்துறையின் அடக்குமுறை பக்கம் திசை திருப்பப்பட்டுள்ளது. இதற்கு, OSD ஒரு பகடைக் காயாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தி.மு.க. குற்றஞ்சாட்டுகிறது. மாணவர்கள் நலன் காக்கக் களத்தில் உறுதுணையாக நிற்போம் எனத் தெரிவித்துள்ள மாநில மகளிரணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்:மாணவர்களுடனான அணுகுமுறையை திறம்பட செயல்படுத்தாத OSD வம்சிதரெட்டி விரைவில் மாற்றப்பட வேண்டும்.மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும்.எதிர்வரும் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும்.மாணவர் நலனில் அக்கறையுள்ளவர் புதிய OSDயாக நியமிக்கப்பட வேண்டும்.மாணவனை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.காலாப்பேட்டை காவல் நிலையத்தில் நுழைந்து காவலர்களை ஒருமையில் பேசியதுடன், ‘தொலைத்துவிடுவேன்’ எனக் கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்தச் செயல்பாட்டிற்குப் புதுச்சேரி தி.மு.க. நிச்சயம் பாடம் புகட்டும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version