இலங்கை
கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் வழங்கும் உத்தரவு வேண்டாம்; நீதிச்சேவை ஆணைக்குழு நீதிபதிகளுக்கு அறிவிப்பு
கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் வழங்கும் உத்தரவு வேண்டாம்; நீதிச்சேவை ஆணைக்குழு நீதிபதிகளுக்கு அறிவிப்பு
சந்தேகநபருக்கோ அல்லது கைதிக்கோ சிறப்புப் பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் நீதிவான்கள் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என நீதிச்சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மற்றும் சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகள் தொடர்பாக சிறப்பு சூழ்நிலைகளில் நீதிமன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்கும் போது நீதிவான்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பாக நீதிச் சேவைகள் ஆணைக்குழு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு சந்தேகநபரையோ அல்லது கைதியையோ சிறையில் உள்ள காலப்பகுதியில் அவர்களின் குடும்பங்களின் சிறப்பு நிகழ்வுகளில் கலந்துகொள்ள அல்லது வேறு எந்தநோக்கத்துக்காகவும் சிறையிலிருந்து அவர்களின் வீடுகள் அல்லது பிற இடங்களுக்கு அழைத்துச் செல்ல நீதிவான்கள் உத்தரவுகளைப் பிறப்பிக்கக்கூடாது.
நெருங்கிய இரத்த உறவினர்களின் இறுதிச் சடங்குகளின் போதுகூட, சிறைச்சாலைத் திணைக்களத்தின் உத்தரவுகள் மற்றும் விதி முறைகளின்படி சிறைச்சாலை கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் சந்தேகநபர்கள் மற்றும் கைதிகள் தேவையான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.