வணிகம்
திருப்புவனம் வாரச் சந்தையில் ஆடு, கோழி விற்பனை அமோகம்: தீபாவளியையொட்டி களைகட்டியது சேல்ஸ்!
திருப்புவனம் வாரச் சந்தையில் ஆடு, கோழி விற்பனை அமோகம்: தீபாவளியையொட்டி களைகட்டியது சேல்ஸ்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வாரச் சந்தை களைகட்டியது. திருநாளுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், விற்பனைக்காகப் பெருமளவிலான விவசாயிகள் தங்கள் ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளைச் சந்தைக்குக் கொண்டு வந்திருந்தனர்.திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள பெத்தானேந்தல், அல்லிநகரம், கீழடி, கொந்தகை, பழையனூர் போன்ற கிராமங்களில் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடு, கோழிகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. இவ்வட்டாரத்தில் மட்டும் சுமார் 28 ஆயிரம் வெள்ளாடுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் இந்தச் சந்தைக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வருகை தருகின்றனர்.தீபாவளியை முன்னிட்டு இந்த வாரம் சந்தையில் வாங்கும், விற்கும் நடவடிக்கைகள் அதிகரித்தன. கடந்த வாரம் ரூ.9,000 முதல் ரூ.11,000 வரை விலைபெற்ற 10 கிலோ எடை கொண்ட ஆடு, இவ்வாரம் ரூ.12,000க்கு விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி கொண்டாட்டத்துக்கான இறைச்சித் தேவையால் விலை கடுமையாக உயர்ந்தது. ஒன்றரை கிலோ எடை கொண்ட நாட்டுக் கோழி ரூ.350க்கு விற்பனையானது. செம்மறியாடுகள் வழக்கம்போல ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை விலைபோகின. வாரச் சந்தை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பிய நிலையில் விற்பனை சிறப்பாக நடைபெற்றது. வியாபாரிகள் மொத்தமாக ஆடுகளை வாங்கி சரக்கு வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.