இலங்கை
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு- ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு- ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நேற்று 13ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரச சேவை மற்றும் தனியார் துறையின் சம்பள அதிகரிப்புக்கு ஏற்ப, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்கும் பரிந்துரை குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற சம்பளத்தை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அந்த சம்பள அதிகரிப்பு முறை தொடர்பில் தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
பெருந்தோட்டத் தொழிற்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் விளக்கினர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த விடயத்தில் அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலை வழங்கியதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த பெருந்தோட்ட நிறுவனப் பிரதிநிதிகள், இந்தத் துறையின் முன்னேற்றம் தொடர்பான தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.
மேலும் இக் கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ, தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, தொழில் ஆணையர் நாயகம் நதீகா வட்டலியத்த மற்றும் ஏனைய அதிகாரிகள், இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கம், இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் ஆகிய தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதித்துவப்படுத்துவ பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.