இலங்கை
இணையவழி மோசடி; வங்கிக் கணக்கில் பணம் திருட்டு!
இணையவழி மோசடி; வங்கிக் கணக்கில் பணம் திருட்டு!
மோசடியான முறையில் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 50 லட்சத்து 69 ஆயிரத்து 610 ரூபா பணத்தை திருடியதாக கூறப்படும் நான்கு சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று செவ்வாய்க்கிழமை 14ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தெஹிதெனிய மற்றும் முருதலாவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 30 முதல் 38 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நால்வரும் தண்ணீர் மோட்டார் விற்பனை செய்யப்படுவதாக இணையத்தளத்தில் போலியாக பதிவிடப்பட்டுள்ள விளம்பரம் ஒன்றின் ஊடாக தொடர்பு கொள்வோரின் வங்கிக் கணக்கின் OTP இலக்கத்தை பெற்றுக்கொண்டு மோசடியான முறையில் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி பணத்தை திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் வாரியபொல நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை 15ஆம் திகதி ஆஜரபடுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இனந்தெரியாத நபர்களுக்கு உங்களது வங்கிக் கணக்கின் OTP இலக்கத்தை பகிர்வதை தவிர்க்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.