பொழுதுபோக்கு
நேரடி உடலுறவு காட்சி மட்டும் தான் இல்ல, இது கலாச்சார சீரழிவு; பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக வேல்முருகன் அதிரடி
நேரடி உடலுறவு காட்சி மட்டும் தான் இல்ல, இது கலாச்சார சீரழிவு; பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக வேல்முருகன் அதிரடி
கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும். இல்லை என்றால் எங்கள் மகளிர் அணியுடன், விஜய் டிவி அலுவலகத்தில் வாசலில் துடப்பம், மற்றும் செருப்புடன் போராட்டம் நடத்துவோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.சென்னை தலைமை செயலாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில், தமிழகத்தில் சமூக அக்கறையுடன், மக்களைச் சிந்திக்கத் தூண்டும் பல நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சி நடத்தி வருவது பாராட்டுக்குரியது. உதாரணமாக, ‘நீயா நானா’, ‘தமிழகத்தின் சிறந்த பாடகர்’, ‘தமிழால் பேசுவோம்’ போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் சமுதாயத்திற்குப் பயனுள்ளவையாக இருக்கின்றன. அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தும் விஜய் தொலைக்காட்சிக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.ஆனால், தொடர்ந்து ‘பிக்பாஸ்’ என்கிற பெயரில் தமிழ் கலாச்சாரத்தை, பண்பாட்டை, ஒழுக்க நெறிமுறைகளைச் சீரழித்து, இளைய தலைமுறையினரைத் திசை திருப்பும் ஒரு மிக மோசமான நடவடிக்கையை விஜய் தொலைக்காட்சி எடுத்து வருகிறது. தமிழ் சமூகம் எக்கேடு கெட்டாலும் கவலை இல்லை; நமக்கு வருமானம் மட்டுமே மிகவும் முக்கியம் என்ற அடிப்படையில் அந்தக் நிகழ்ச்சியை அவர்கள் நடத்தி வருகிறார்கள்.சமீபத்தில் தொலைக்காட்சியில் காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் குடும்பத்தோடு, கணவன்-மனைவியோடு, தாய்-தந்தையோடு, ஒரு வயது வந்த பெண்ணோடு உட்கார்ந்து பார்க்க முடியாத, குழந்தைச் செல்வங்களோடு பார்க்க முடியாத அருவருக்கத்தக்க அங்க அசைவுகள் நிறைந்த காட்சிகளும், படுக்கை அறை காட்சிகளும், ஆண்-பெண் கட்டிப்பிடித்து முத்தமிடும் காட்சிகளும் எனத் தரங்கெட்டவையாக இருக்கின்றன. இன்னும் நேரடியான உடலுறவு காட்சி மட்டும்தான் அவர்கள் ஒளிபரப்பவில்லை. இது குறித்து நான் தொடர்ந்து ஜனநாயக ரீதியாக அறிக்கைகளைத் தந்துகொண்டிருக்கிறேன்.சட்டமன்றத்தில் இதைக் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவரக் கோரி பேரவைத் தலைவருக்கு தந்திருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் இந்தக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எடுத்துக்கொண்டு, பேரவைத் தலைவர் அனுமதித்து, கண்டிப்பாக இதற்குத் தமிழக முதலமைச்சரும் செய்தி ஒளிபரப்புத் துறையும் தகவல் தொழில்நுட்பத் துறையும் தடை விதிக்க வேண்டும் என்று உணர்த்தும் வகையில், மிக பெரிய முற்றுகைப் போராட்டத்தைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தும்.பிக்பாஸ் அரங்கத்திற்குள்ளாகவும், விஜய் தொலைக்காட்சி முன்பாகவும் பல்லாயிரக்கணக்கான தமிழக வாழ்வுரிமைக் கட்சியினுடைய தாய்மார்களைத் திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம். இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் பொதுமக்களும் விஜய் தொலைக்காட்சியின் கமெண்ட்ஸ் பகுதியில் பல்லாயிரக்கணக்கான கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். ‘இது ஒரு மோசமான நிகழ்ச்சி’, ‘இது பண்பாடு-கலாச்சாரச் சீரழிவு நிகழ்ச்சி’, ‘தயவுசெய்து இதைத் தடுத்து நிறுத்துங்கள், இது வேண்டாம்’ என்று சொல்கிறார்கள்.எனவே, தமிழக அரசு எங்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, தமிழக முதலமைச்சரும் தமிழக அரசும் உடனடியாக அந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும்.கர்நாடகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆந்திராவிலும், கேரளாவிலும் இந்த நிகழ்ச்சி வேறு விதமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கு தமிழ்நாட்டில், தமிழர்கள் சாதியாகப் பிரிந்து கிடக்கிறார்கள், மதமாகப் பிரிந்து கிடக்கிறார்கள், கட்சியாகப் பிரிந்து கிடக்கிறார்கள், நாம் எப்படி வேண்டுமானாலும் கல்லா கட்டலாம் என்ற அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது என்பது ஏற்புடையது அல்ல.அதனால், உடனடியாக அதற்குத் தடை விதிக்க வேண்டும். இது ஒரு நியாயமான மக்களுக்கான போராட்டம்; அதற்கும் ஆதரவளிக்கவாவது தமிழக முதலமைச்சர் இதற்கு ஒரு தீர்வைக் காண வேண்டும் என்று பத்திரிகை ஊடக நண்பர்கள் சார்பாக வேண்டுதலை முன் வைக்கிறேன்.முன்னதாக, சேலத்தில் நடந்த ‘பேக் வெட்டிங்’ (போலியான திருமணம்) என்கிற போர்வையில் மாலை இருக்கும், தாலி இருக்கும், மணவறை இருக்கும், அதே ஹோட்டலில் முதலிரவு அறையும் இருக்கும். இது கேடுகெட்ட தொழில் அல்லவா? இதை எப்படித் தமிழக அரசுக்குள் அனுமதிக்கிறீர்கள்? தமிழகத்தில் இது எதிர்த்துப் போராடி, தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று நான் தடுத்து நிறுத்தியிருக்கிறேன். அதேபோன்று, இன்று சட்டமன்றத்தில் பேசி முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ என்கிற மிகப் பெரிய ஒரு பண்பாட்டுச் சீரழிவு கலாச்சார ஆட்டத்தையும் நான் தடுத்து நிறுத்தியிருக்கிறேன்.முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து, இதை எல்லாம் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அப்படி இல்லை என்றால், நாங்கள் மிகப் பெரிய துடப்பத்தோடும், செருப்புகளைக் கொண்டு எங்களுடைய மகளிர் அணி இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள். ‘நீயா நானா’ போன்ற நல்ல விஷயங்களைச் செய்யும் ஒரு ஊடகமே, அது எத்தனையோ தமிழ் சமூகத்திற்காகச் செய்கின்ற நல்ல விஷயங்கள் இருந்தும், நாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டிய ஒரு நெருக்கடிக்குத் தள்ளப்படுகிறோம் என்று கூறியுள்ளார்.