விளையாட்டு
இவருக்கு பவுலிங் போட ரொம்ப கஷ்டப்பட்டேன்: வருண் சக்கரவர்த்தி ஓபன்
இவருக்கு பவுலிங் போட ரொம்ப கஷ்டப்பட்டேன்: வருண் சக்கரவர்த்தி ஓபன்
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக களமாடி வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இவர், 24 டி-20 போட்டிகளில் ஆடி 40 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இதேபோல், 4 டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டையும், 84 ஐ.பி.எல் போட்டிகளில் 100 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியிருக்கிறார். 25 வயதான வருண் சக்கரவர்த்தி, கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 2025 ஆசியக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். இந்தியா கோப்பை வெல்லவும் சிறப்பாக உதவி இருந்தார். இந்த தொடரில் 6 போட்டிகளில் ஆடிய இவர் 7 விக்கெட்டை வீழ்த்தினார். தனது அபாரமான ஃபார்மை தொடர்ந்தும் வருகிறார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தான் மிகவும் சிரமப்பட்ட பந்து வீசிய வீரர்களின் பெயர்களை வெளிப்படுத்தி இருக்கிறார் வருண் சக்கரவர்த்தி. அதில், கிறிஸ் கெய்ல், விராட் கோலி மற்றும் சமீபத்தில் அபிஷேக் சர்மா ஆகியோரை தான் பந்து வீசிய கடினமான பேட்ஸ்மேன்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் நிகழ்வில் பேசிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, “கிறிஸ் கெய்ல், விராட் கோலி மற்றும் சமீபத்தில் அபிஷேக் சர்மா ஆகியோருக்கு பந்துவீச சிரமப்பட்டேன். அடுத்த முறை அபிஷேக்கிடம் பந்து வீச்சாளர்களிடம் மென்மையாக இருக்க முயற்சிக்கச் சொல்ல வேண்டும். அவர் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணிக்காக அப்படி பேட்டிங் செய்ய வேண்டாம். இந்தியாவுக்காக அப்படி பேட்டிங் செய்யட்டும்,” என்று கூறியுள்ளார். தான் ஒரு செஸ் பிரியர் என்பதையும் வெளிப்படுத்தியுள்ள வருண் சக்கரவர்த்தி, தனக்கு விஷயங்கள் நன்றாக நடந்து கொண்டிருந்தாலும், தற்போது சுனில் நரைன் மற்றும் ரஷீத் கான் போன்றவர்களைப் போல சிறந்த வீரராக இருக்க இன்னும் நிறைய உழைக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். “நான் இப்போது செஸ் போட்டியை அதிகம் பார்த்து வருகிறேன். குகேஷ் சாம்பியன்ஷிப்பை வென்றபோது, நான் இப்போது உலக சாம்பியனாக இருக்கலாம் என்று அவர் கூறினார், ஆனால் மேக்னஸ் கார்ல்சன் நம்பர் ஒன் வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே நான் முதலிடத்தில் இருக்கலாம். ஆனால் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர் ஜஸ்பிரித் பும்ரா தான். சுனில் நரைன், ரஷீத் கான் ஆகியோரும் உள்ளனர். நான் நன்றாக இருக்கிறேன், ஆனால் அந்த நிலையை அடைய இன்னும் சிறிது காலம் ஆகும். நான் எப்போதும் ஒரு உள்முக சிந்தனையாளராக இருந்திருக்கிறேன். நான் அர்ஷ்தீப் அல்லது அபிஷேக் நாயர் போன்றவர்கள் போல் அல்ல. அவர்கள் வெளிப்படையாகப் பேசுபவர்கள், நகைச்சுவைகளைச் சொல்லக்கூடியவர்கள். எனக்கு சற்று டார்க் நகைச்சுவை உணர்வு இருக்கிறது. பயிற்சிக்குப் பிறகு நான் என் அறைக்குச் சென்று, கிரிக்கெட்டிலிருந்து விலகி இருக்க தொடர்ந்து எழுதுகிறேன். எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும். அது எனக்குள் இருப்பதை வெளியே கொண்டு வந்து காட்சிப்படுத்த உதவுகிறது. இறுதியில் நான் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதையும், அடுத்த நாள் எனக்கு ஒரு போட்டி விளையாட உள்ளது என்பதையும் முற்றிலும் மறந்துவிடுகிறேன்.” என்று வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.