தொழில்நுட்பம்
உயிருள்ள கண்கள், அச்சு அசலான தோல்… மனிதனைப் போல உணர்ச்சிகளை கொண்ட ‘எல்ஃப் வி1’ ரோபோட்!
உயிருள்ள கண்கள், அச்சு அசலான தோல்… மனிதனைப் போல உணர்ச்சிகளை கொண்ட ‘எல்ஃப் வி1’ ரோபோட்!
சினிமாக்களில் பார்த்தது போன்ற, மனிதர்களைப் போலவே பேசும், உணர்ச்சிகளைக் காட்டும் ரோபோக்களை ஷாங்காயை தளமாக கொண்ட அஹெட்ஃபார்ம் டெக்னாலஜி (AheadForm Technology) என்ற நிறுவனம் நிஜமாக்கியுள்ளது. இவர்கள் உருவாக்கி உள்ள மேம்பட்ட ‘எல்ஃப் V1’ (Elf V1) என்ற மனித உருவ ரோபோ, தொழில்நுட்ப உலகில் ஒரு பெரிய பாய்ச்சலாகக் கருதப்படுகிறது.உயிருள்ள கண்கள், அச்சு அசலான தோல்!இந்த ரோபோவின் தனிச்சிறப்பே அதன் வியக்கவைக்கும் மனிதத் தோற்றம்தான். ‘அன்கேனி வேலி’ (Uncanny Valley) பாதிப்பைத் தவிர்க்கும் வகையில், ரோபோவுக்கு மிக இயல்பான உயிரிணக்கத் தோல் (Bionic Skin) வழங்கப்பட்டுள்ளது. மனித முகத்தில் உள்ள தசைகளைப் போலவே, எல்ஃப் V1-க்கு 30 முகத் தசைகள் உள்ளன. இவை பிரஷ்லெஸ் மைக்ரோ-மோட்டார்கள் மூலம் இயக்கப்பட்டு, மனிதர்களைப் போல துல்லியமான சிரிப்பு, கோபம், ஆச்சரியம் போன்ற உணர்ச்சிகளை முகத்தில் கொண்டு வர உதவுகின்றன. நகரும் கண்கள், ஒத்திசைக்கப்பட்ட பேச்சு மற்றும் மிகத் துல்லியமான கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றால், இதன் முகபாவங்களும் பேச்சும் அச்சு அசலாக மனிதனைப் போலவே இருக்கின்றன.உணர்ச்சிகளைப் படிக்கும் ஏ.ஐ. மூளை!எல்ஃப் V1-க்கு உணர்ச்சிப்பூர்வமான பதிலளிக்கும் திறனைக் கொடுக்க, அது சுய-கண்காணிப்பு AI அல்காரிதங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. மனிதர்கள் வாய் வார்த்தையில் சொல்லாத போதும், அவர்களின் முகபாவங்கள் (Non-verbal cues), குரலின் தொனி போன்றவற்றிலிருந்து உணர்ச்சிகளைக் கண்டறியும் திறன் இந்த ரோபோவுக்கு உள்ளது. LLMs மற்றும் VLMs போன்ற சக்திவாய்ந்த ஏ.ஐ. மாதிரிகள் ரோபோவுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதனால், இது மனிதர்களுடனான தொடர்பிலிருந்து நிகழ் நேரத்தில் (Real-time) கற்றுக்கொண்டு, மனிதனைப் போலவே உணர்வுபூர்வமாகப் பதிலளிக்கும் திறன் பெறுகிறது. இந்த ரோபோ 30 டிகிரி இயக்க சுதந்திரம் (degrees of freedom) கொண்டுள்ளதால், மிகவும் சிக்கலான அசைவுகளையும் மென்மையாகச் செய்ய முடிகிறது.மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதே தங்கள் நோக்கம் என்று அஹெட்ஃபார்ம் நிறுவனம் கூறுகிறது. இந்த ரோபோக்கள் விரைவில் பல்வேறு துறைகளிலும், அன்றாட வாழ்க்கையிலும் ஒரு உதவியாளராகவும், துணையாளியாகவும் (Companion) வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதர்களைப் போலவே சிந்தித்து, உணர்ச்சிகளைப் பரிமாறிக்கொள்ளும் இந்த ரோபோவின் வருகை, மனித-இயந்திர தொடர்பில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை!