இலங்கை
கோவில் பசுக்கள் இறைச்சிக்காக விற்பனை – அறங்காவலர் சபை குற்றச்சாட்டு!
கோவில் பசுக்கள் இறைச்சிக்காக விற்பனை – அறங்காவலர் சபை குற்றச்சாட்டு!
கிளிநொச்சி – உருத்திரபுர சிவன் ஆலயத்தின் நல்ல இன பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆலயத்தின் அறங்காவலர்சபை குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த ஆலயத்தின் திருவிழாவுக்கு என ஒரு நிர்வாகக் குழுவானது தெரிவு செய்யப்பட்டது. அந்த குழுவாது அறங்காவலர் சபையின் கீழ், திருவிழா காலத்தில் மட்டுமே செயற்படும் வண்ணம் தெரிவு செய்யப்பட்டது.
திருவிழா நிறைவடைந்த பின்னரும் அந்த நிர்வாகம் தொடர்ந்து செயற்படுவதாகவும், அந்த நிர்வாகம் ஆலயத்தின் செயற்பாடுகளில் தன்னிச்சையாக தீர்மானம் எடுப்பதாகவும் அறங்காவலர் சபையால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கமைய ஆலயத்திற்கு நேர்த்திக்காக வழங்கப்பட்ட நல்ல இன பசுமாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டதாகவும், விற்பனை செய்த 20 இலட்சம் ரூபா பணம் இதுவரை வங்கி கணக்கிற்கு வைப்புச் செய்யப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. உரிய அதிகாரிகளுக்கு இது குறித்து தெரியப்படுத்தியும் அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
எனவே திருவிழா குழுவானது ஆலயத்தின் நிர்வாக நிறைவேற்று குழு போன்று செயற்படுவதை தடுக்குமாறும், அந்த குழுவின் காலப்பகுதி நிறைவடைந்தமையால் அந்த குழுவை கலைக்குமாறும், இந்து கலாச்சார திணைக்களம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.