இந்தியா
போலி சைக்கிள் மோசடி; கைதை தவிர்க்க ரூ.80 லட்சம் லஞ்சம்: புதுச்சேரியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
போலி சைக்கிள் மோசடி; கைதை தவிர்க்க ரூ.80 லட்சம் லஞ்சம்: புதுச்சேரியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
புதுச்சேரி, சாரம் காமராஜர் சாலையில் ‘கோ பிரி சைக்கிள்’ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 3-ம் தேதி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ. 2 கோடியே 45 லட்சம் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ரூ.60 கோடி மோசடி; உரிமையாளர் கைது:இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத் துறையினர் (Enforcement Directorate) நடத்திய விசாரணையில், புதுச்சேரியில் மட்டும் ரூ.60 கோடிக்கு மேல் மோசடி நடந்ததும், இது ஒரு போலி சைக்கிள் நிறுவனம் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் 13 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.20 கோடி முடக்கப்பட்டது.இந்த மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், ‘கோ பிரி சைக்கிள்’ நிறுவனத்தின் உரிமையாளரான கேரளாவைச் சேர்ந்த நிஷாத் அகமதுவைத் தேடி வந்தனர். அவர் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.600 பேரிடம் மோசடி:இந்த மோசடி வழக்கு சைபர் கிரைம் போலீசாரிடம் இருந்து புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார், நீதிமன்ற அனுமதியுடன் புழல் சிறையில் இருந்த நிஷாத் அகமதுவை கடந்த மாதம் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையின்போது, 600-க்கும் மேற்பட்டவர்களிடம் முதலீடு பெற்று மோசடி செய்ததாக நிஷாத் அகமது ஒப்புக்கொண்டார்.ரூ.80 லட்சம் லஞ்சம்; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்:இந்நிலையில், இந்த மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாமல் இருப்பதற்காக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி ரூ.80 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து காவல் துறை தலைமையக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கீர்த்தியை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.விசாரணையின்போது, இன்ஸ்பெக்டர் கீர்த்தி தான் வாங்கிய பணத்தைப் போலீஸ் அதிகாரிகளுக்கும் பிரித்துக் கொடுத்ததாகத் தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த விவகாரத்தில் மேலும் சில உயர் அதிகாரிகளும் சிக்குவார்களோ என்ற கலக்கத்தில் போலீஸ் அதிகாரிகள் உள்ளனர்.