தொழில்நுட்பம்
650 அடி நீள டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு… தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!
650 அடி நீள டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு… தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!
இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட்ஷயரில் தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர்கள் உலகையே வியக்க வைக்கும் பிரம்மாண்டமான கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளனர். சுமார் 166 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த ராட்சத டைனோசர் ஒன்று பதித்துச்சென்ற 220 மீட்டர் நீளமுள்ள உலகின் மிக நீண்ட கால் தடங்களில் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எப்படி வெளிப்பட்டது இந்தக் காலப்பயணத் தடம்?ஆக்ஸ்ஃபோர்ட்ஷயரில் உள்ள டெவார்ஸ் ஃபார்ம் குவாரி (Dewars Farm Quarry) தான் இந்தக் காலப்பயணத் தடத்தை ஒளித்து வைத்திருந்த இடம். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் உட்பட இங்கிலாந்து முழுவதிலுமிருந்து வந்த நிபுணர்கள் குழு இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டது. மில்லியன் கணக்கான ஆண்டுகளாக அடுக்குகளாகப் படிந்திருந்த பழங்கால சுண்ணாம்புக் கற்களை அகற்றுவதற்காக, வெடிவைப்பு நடத்தப்பட்டது. அப்போது, டன் கணக்கிலான பாறைகளின் அடியில் புதைந்திருந்த இந்தக் கால் தடங்கள் வெளிப்பட்டன.ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எம்மா நிக்கோல்ஸ், இந்தக் கால் தடங்கள் “மிகவும் பிரம்மாண்டமானவை” என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார். “மக்கள் இதுவரை பார்த்திராத ஒன்றை நாங்கள் வெளிக்கொணர்ந்துள்ளோம். இவ்வளவு பெரியதைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிது,” என்கிறார் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் தொல்லுயிரியலாளர் கிர்ஸ்டி எட்கார்.நீண்ட நெடிய இந்தக்கால் தடங்களுக்கு விஞ்ஞானிகள் சூட்டியுள்ள பெயர்: ‘டைனோசர் சூப்பர்ஹைவே’. இந்த நீண்ட பாதை, 18 மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய, நீண்ட கழுத்துடைய, 4 கால் தாவர உண்ணியான சௌரோபாட் (Cetiosaurus போன்றது) டைனோசரால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு சௌரோபாட் கால் தடமும் சுமார் ஒரு மீட்டர் அகலம் கொண்டது. இது ஒரு யானையின் பாதத்தை விட இருமடங்கு பெரியது!லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீட்டர் ஃபால்கிங்ஹாம், முன் பாதமும் பின் பாதமும் ஒரே இடத்தில் பதிந்ததைக் கவனித்து, டைனோசரின் தனித்துவமான நடையழகை உறுதிப்படுத்தினார். இந்த ராட்சதத் தடங்களுக்கு அருகில், 9 மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய, 2 கால் மாமிச உண்ணியான மெகாலோசௌரஸ் டைனோசரின் சிறிய, 3 கால்விரல் தடங்களும் கண்டறியப்பட்டன. 20 ஆண்டு தொல்லுயிரியலாளராக இருந்த பிறகும், இந்தக் கால் தடங்களைப் பார்க்கும்போது எனக்கு அந்தச் சிலிர்ப்பூட்டும் உணர்வு ஏற்படுகிறது. இது உண்மையிலேயே மனதை நெகிழ வைக்கும் ஒரு அனுபவம்,” என்கிறார் டாக்டர் நிக்கோல்ஸ்.இந்தக் கால் தடங்களை ஆராய்ந்ததன் மூலம் சுவாரசியமான பல தகவல்களை விஞ்ஞானிகள் அறிந்துகொண்டுள்ளனர். பேராசிரியர் ஃபால்கிங் ஹாம் உருவாக்கிய 3டி மாதிரி, சௌரோபாட் டைனோசர் வினாடிக்கு சுமார் 2 மீட்டர் வேகத்தில், அதாவது ஒரு மனிதனின் வேகமான நடைக்குச் சமமான வேகத்தில் நகர்ந்துள்ளது என்பதைக் காட்டியது. ஒரு கால் தடம் மட்டும் சற்று விலகி இருந்தது. ஒருவேளை அது ஏதோ சத்தம் கேட்டு, சுற்றும் முற்றும் பார்த்து, பாதுகாப்பை உறுதிப்படுத்தச் சற்று நேரம் நின்றிருக்கலாம் அல்லது சறுக்கியிருக்கலாம் என்று ஃபால்கிங்ஹாம் ஊகிக்கிறார்.ஆக்ஸ்ஃபோர்ட் ஆராய்ச்சியாளர் டங்கன் மர்டாக் இத்தளத்தில் கிடைத்த சிறிய சிப்பிகள், கடல் அர்ச்சின்கள் மற்றும் பெலெம்னைட்டுகள் போன்ற கடல் புதைபடிவங்களை ஆய்வு செய்தார். இந்தச் சான்றுகள், 166 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆக்ஸ்ஃபோர்ட்ஷயர் ஒரு ஆழமற்ற கடலுக்கு அடியில் இருந்தது என்பதையும், இன்றைய பஹாமாஸ் அல்லது ஃபுளோரிடா கீஸ் போலக் காட்சியளித்திருக்கலாம் என்பதையும் நிரூபிக்கின்றன.1997-ம் ஆண்டு முதல், இங்கு 200 கெஜம் நீளமுள்ள பாதைகளில் 40-க்கும் மேற்பட்ட கால் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதனால்தான், இது “டைனோசர் நெடுஞ்சாலை” என்ற பெயரைப் பெற்றது. இந்தத் தளமே இங்கிலாந்தின் ஜூராசிக் கடந்த காலத்தைப் பற்றிய மிகச் சிறந்த ஆவணங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.