பொழுதுபோக்கு
கூலி பட நடிகைக்கு டும் டும்… எப்போது தெரியுமா? அவரே சொன்ன தகவல்
கூலி பட நடிகைக்கு டும் டும்… எப்போது தெரியுமா? அவரே சொன்ன தகவல்
கன்னட திரையுலகில் தனது வசீகரமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ரச்சிதா ராம், இப்போது தமிழ் சினிமா ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்டமான ‘கூலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கல்யாணி என்ற வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தனது நடிப்பால் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். கன்னட சினிமாவில் மட்டும் தனது முதல் பத்து ஆண்டுகளைக் கழிப்பேன் என உறுதியாக இருந்த ரச்சிதா, ‘கூலி’ திரைப்படத்தின் மூலம் தனது முடிவை மாற்றியுள்ளார்.’டிம்பிள் குயின்’ என செல்லமாக அழைக்கப்படும் ரச்சிதா ராம், 1992-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி பெங்களூருவில் பிந்தியா ராம் என்ற இயற்பெயருடன் பிறந்தார். கலைக்குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை கே.எஸ். ராம் ஒரு புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர். ரச்சிதாவும் பரதநாட்டியத்தில் முறையாகப் பயிற்சி பெற்று, 50-க்கும் மேற்பட்ட மேடைகளில் நடனமாடியுள்ளார். 2012-ஆம் ஆண்டு ‘அரசி’ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் 2013-ஆம் ஆண்டு ‘புல்புல்’ என்ற கன்னட திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை, 20-க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.இவருக்கு நித்யா ராம் என்ற ஒரு சகோதரியும் உள்ளார், அவரும் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்த ’நந்தினி’ என்ற வெற்றி தொடர் மூலம் தென் இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். நடிகை ரச்சிதா ராம் நடிகர்கள் புனித் ராஜ்குமார், தர்ஷன் உள்ளிட்டோருடனும் நடித்து உள்ளார். இவரது நடிப்பில் ‘லேண்ட் லார்ட்’ மற்றும் ’அயோக்யா-2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.இந்த நிலையில் நடிகை ரச்சிதா ராம் பெங்களூருவில் திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் நிருபர்கள் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நடிகை ரச்சிதா ராம், ‘இன்னும் சில நாட்களில் நான் தாம்பத்திய வாழ்க்கையில் கால் பதிக்க இருக்கிறேன். எனக்கு கணவனாக வரப்போகிறவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு எந்தவித கனவும் இல்லை. வீட்டில் எனக்கு வரன் பார்க்கும் வேலை வேகமாக நடந்து வருகிறது’ என்றார்.