இலங்கை
ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெடுந்தீவுக்குப் படகுச்சேவை
ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெடுந்தீவுக்குப் படகுச்சேவை
நெடுந்தீவுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் படகுச் சேவையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவுக்கான வடதாரகை மற்றும் நெடுந்தாரகைப் படகுச் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை நாளாகக் கருதித் தவிர்க்கப்பட்டிருந்தன.
நெடுந்தீவுப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் படகு பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின்கீழ்திருத்த வேலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் தற்போது ஞாயிற்றுக்கிழமை படகுச்சேவை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலர் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்ட போக்குவரத்துத் தொடர்பான செயற்குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் யொ.குருஸ், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியச்சீலன், பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பிரத்தியேக இணைப்பாளர் ஸ்ரீவர்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலை 6.30 மணிக்கு நெடுந்தீவிலிருந்து புறப்படும் படகு காலை 7.30 மணியளவில் குறிகாட்டுவானை அடையும். குறிகாட்டுவானில் இருந்து காலை 7.30 மணிளவில் நெடுந்தீவுக்குப் படகு புறப்படும். மாலை 3.30 மணியளவில் நெடுந்தீவில் இருந்து படகு குறிகாட்டுவானுக்குப் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.