இலங்கை
தமிழ்த் தேசியப் பேரவை அடியோடு குலைகின்றது; ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் கஜேந்திரகுமார் எம்.பி. கடும் அதிருப்தி!
தமிழ்த் தேசியப் பேரவை அடியோடு குலைகின்றது; ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் கஜேந்திரகுமார் எம்.பி. கடும் அதிருப்தி!
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை மையப்படுத்திய அரசியலமைப்பின் 13ஆம் திருத்தந்தை யைப்படுத்திய மேற்கொள்வதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டணியுடனான அரசியற் கூட்டில் (தமிழ்த் தேசியப் பேரவை) இருந்து வெளியேறுவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் 13ஆவது திருத்தத்தை முற்றாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பில் அவர்கள் தமக்குள் ஒன்றுகூடிக் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளனர். இதையடுத்தே, தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கும் போது செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு முரணாக அந்தக் கட்சிகள் நடந்துகொண்டதாகக் கருதி, பேரவையில் இருந்து வெளியேறுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார். அதில், பேரவையில் பங்காளித்தரப்பாக உள்ள ஜனநாயகத்தமிழ்த் தேசியக் கூட்டணியினரின் செயற்பாட்டில் அதிருப்தி தெரிவித்ததுடன், கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்ததாவது:-
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து 13ஆவது திருத்தம் தொடர்பில் கதைத்துள்ளனர். நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக்கூட்டணியோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஒற்றையாட்சி முறைக்குள் தமிழ்த் தேசிய அரசியலை நடத்துவதற்கு இடமில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அத்துடன், 13ஆவது திருத்தம் தமிழர்களுக்கான தீர்வல்ல, ‘ஏக்கிய ராஜ்ஜிய’ யோசனைகளுக்கும் இடமில்லை என்றும் தெளிவாகக் கூறியுள்ளோம். இவற்றுக்கெல்லாம் இணங்கியே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினர் எம்முடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். ஆனால். எங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு முரணாகவே தற்போது அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எம்முடன் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு எம்மூடாகப் பதவிகளைப் பெற்றுவிட்டு தற்போது ஒப்பந்தங்களுக்கு முரணாகச் செயற்படுகின்றமையை ஏற்க முடியாது. என்பதுடன், இந்தச் செயற்பாட்டை அவர்கள் தாமாகவே ஒப்பந்தத்தில் இருந்து விலகிய செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
நாங்கள் மீண்டும் மீண்டும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினருக்கு வலியுறுத்துவது என்னவென்றால், தமிழ் மக்களுக்கு மோசமான தீங்குகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளைச் செய்யாதீர்கள் என்பதே. இந்தச் செயற்பாடுகள் சுமந்திரன் போன்றோரின் தமிழர் விரோதச் செயற்பாட்டை வலுப்படுத்துவதாகவே அமைந்துவிடும் என்றார்.