பொழுதுபோக்கு
பெரிய ஸ்டார்களின் படங்கள் இல்லாத தீபாவளி… இதுவரை மோதிக் கொண்ட தமிழ் சினிமா நட்சத்திரங்கள் யார்?
பெரிய ஸ்டார்களின் படங்கள் இல்லாத தீபாவளி… இதுவரை மோதிக் கொண்ட தமிழ் சினிமா நட்சத்திரங்கள் யார்?
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி என்றால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸாகுவதற்கு போட்டிபோட்டு நிற்கும். தீபாவளி நெருங்கும் போது எப்படி பட்டாசுகள், புத்தாடைகள் பற்றி பேச்சு அடிபடுமோ அதைவிட அதிகமாக தீபாவளி ரிலீஸ் குறித்த படங்களின் பேச்சுக்கள் மற்றும் செய்திகள் அதிக அளவில் உலா வரும். ஆனால், கொரானாவிற்கு பின் வெகுசில படங்களே தீபாவளிக்கு வெளியாகி வருகின்றன. இதற்கு முன்பு தீபாவளி என்றால் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவதுடன் அந்த நடிகர்களின் ரசிகர்கள் கொண்டாட்டங்களும் ஆரம்பித்துவிடும். இது தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலத்திலிருந்தே, அதாவது தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்தே இந்தப் போக்கு இருந்து வருகிறது.தியாகராஜ பாகவதர் vs சின்னப்பாஎம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் 1944-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி தீபாவளி தினத்தன்றுதான் வெளியானது. அந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி கதாநாயகனாக இருந்த பி.யு.சின்னப்பா நடித்த மகாமாயாவும் அதே நாளில் வெளியானது.இதில் ஹரிதாஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சென்னையில் ஒரு திரையரங்கில் இரண்டு ஆண்டுகள் வரை ஓடியது. ஹரிதாஸ் படத்திற்குப் பிறகு, எம்.கே. தியாகராஜ பாகவதர் சிறைக்குச் சென்றுவிட, அவருடைய படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. சிவாஜி vs எம்.ஜி.ஆர்இதே காலக்கட்டத்தில் கடந்த 1952-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி மு. கருணாநிதியின் கதை வசனத்தில் கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் உருவான பராசக்தி வெளியானது. இந்த படத்தின் மூலம் தான் நடிகர் சிவாஜி அறிமுகமானார். படம் வெற்றியடைந்ததை அடுத்து சிவாஜி கணேசன் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தார். இதே வேளையில் எம்.ஜி.ஆரின் படங்களும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியானது. 1960-ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று எம்.ஜி.ஆர். நடித்த ’மன்னாதி மன்னன்’ திரைப்படம் வெளியானது. அதே நாளில் சிவாஜி கணேசன் நடித்த ’பெற்ற மனம்’, ‘பாவை விளக்கு’ திரைப்படங்கள் போட்டியாக வெளியாகின. இதில் மன்னாதி மன்னன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதற்குப் பிறகு, 1964-ஆம் ஆண்டு தீபாவளியை ஒட்டி எம்.ஜி.ஆர். நடித்த ’படகோட்டி’-யும் சிவாஜி கணேசன் நடித்த ’நவராத்திரி’ திரைப்படமும் வெளியாயின. இரண்டு படங்களுமே குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றன.ரஜினி vs கமல்1980-களில் முன்னணி நட்சத்திரகளாக இருந்த ரஜினி- கமல் திரைப்படங்கள் பெரும்பாலும் தீபாவளி அன்று தான் ரிலீஸாகின. 1983-ல் ரஜினி நடித்த ‘தங்க மகன்’ திரைப்படமும் கமல் நடித்த ’தூங்காதே தம்பி தூங்காதே’ திரைப்படமும் வெளியானது. இதே தீபாவளிக்கு சிவாஜி நடித்த வெள்ளை ரோஜா திரைப்படமும் வெளியானது.1984-ல் ரஜினி நடித்த ’நல்லவனுக்கு நல்லவம்’ திரைப்படம் வெளியானது. அதற்குப் போட்டியாக கமல் நடித்த ’எனக்குள் ஒருவன்’ திரைப்படம் வெளியாயின. 1985-ல் ரஜினிக்கு ’படிக்காதவன்’ படமும் கமலுக்கு ’ஜப்பானில் கல்யாணராமன்’ படமும் வெளியாகின. தொடர்ந்து, மாவீரன் – புன்னகை மன்னன், நாயகன் – மனிதன், மாப்பிள்ளை – வெற்றி விழா போன்ற படங்கள் தீபாவளி ரேஸில் மோதின. 1991-ல் தளபதியும் குணாவும் மோதின. 1992ல் பாண்டியன் – தேவர் மகன் படங்களும் 1995-ல் முத்து – குருதிப்புனல் படங்களும் மோதின.விஜய் vs அஜித்இதற்குப் பிறகு, 1990-களில் விஜய்யும் அஜித்தும் தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக உருவெடுத்தனர். இவர்கள் இருவரும் நடித்த படங்கள் மோதிக்கொண்ட முக்கியத் தீபாவளியாக 2002-ஆம் ஆண்டைக் குறிப்பிடலாம். அந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய் நடித்த ’பகவதி’ படமும் அஜித் நடித்த ’வில்லன்’ படமும் மோதின. அடுத்ததாக 2003-ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய் நடித்த ’திருமலை’ திரைப்படமும் அஜித் நடித்த ’ஆஞ்சநேயா’ திரைப்படமும் மோதின. அதே நாளில் சூர்யா – விக்ரம் நடித்த பிதாமகனும் களமிறங்கியது. இதன் பிறகு விஜய் படங்கள் தீபாவளி அன்று ரிலீஸானாலும் அஜித் படங்கள் வெவ்வேறு தருணங்களில் ரிலீஸானது.இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ்இப்படி கடந்த காலங்களில் தீபாவளி புது ரிலீஸ் திரைப்படங்களால் களைக்கட்டிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி அன்று பெரிய ஸ்டார்களின் திரைப்படங்கள் வெளியாகுவதில்லை. இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி துருவ் விக்ரமின் ‘பைசன்’, பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’, ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ போன்ற மூன்று திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றனர். இவை தீபாவளி ரேஸில் வெற்றி பெறுமா? இல்லையா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்