இலங்கை
முறையான அனுமதி இல்லாமல் நுண்நிதி நிறுவனங்கள் செயற்படுவதற்குத் தடை;
முறையான அனுமதி இல்லாமல் நுண்நிதி நிறுவனங்கள் செயற்படுவதற்குத் தடை;
முறையாக ஒழுங்குபடுத்தவும் திட்டம் வேலணை பிரதேசசபை உடும்புப்பிடி!
வேலணைப் பிரதேசசபையின் ஆளுகைக்குள் நுண்கடன் நிதி நிறுவனங்கள் முறையான அனுமதி இல்லாமல் இயங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கட்டமைக்கப்பட்ட ஒழுங்குமுறை ஒன்றை உருவாக்கவும் சபை தீர்மானித்துள்ளது.
வேலணைப் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது நுண்கடன் தொல்லையால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்தும், வறிய மக்களை ஏப்பமிடும் நுண் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தால் முன்மொழிவொன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
‘வறிய மக்களை இலக்கு வைத்து, அதிக வட்டி வீதங்களுடன் பல நுண்நிதி நிறு வனங்கள் கடன்களை வழங்குகின்றன. கண்கவர் பரப்புரைகள் மூலம் பிரதேசத்துக்குள் உள்நுழைந்து மக்களை ஏமாற்றி தமது பொறிக்குள் வீழ்த்துகின்றனர். பெண் தலைமைக் குடும்பங்கள் இத்தகைய நுண்நிதி நிறுவனங்களால் பெரும் சுமைகளையும் துன்பங்களையும் எதிர்கொள்கின்றனர். சிலர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்கும் நிலையும் காணப்படுகிறது’ என்று உறுப்பினர் அனுசியா ஜெயகாந் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த முன்மொழிவின் அவசியம் கருதி, அதை உறுப்பினர் சு.பிரகலாதன் வழி மொழிந்தார். ‘தற்போதுவரை நாற்பதுக்கும் அதிகமான நுண்நிதி நிறுவனங்கள் வேலணை பிரதேசத்துக்குள் ஊடுருவியுள்ளன. இவற்றில் பல நிறுவனங்கள் பதிவுகள் அற்றவையாகக் காணப்படுகின்றன’ என்று அவர் சுட்டிக்காட்டினார். சபையின் உறுப்பினர்கள் அனைவரும் இந்தப் பிரேரணைக்குத் தமது ஆதரவை வழங்கினார்கள். இதையடுத்து, வேலணைப் பிரதேசசபையின் ஆளுகைக்குள் நுண்நிதி நிறுவனங்கள் செயற்பட வேண்டுமாயின் முறையான அனுமதி பெறப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நுண்நிதி நிறுவனங்களை முறைப்படுத்தவும் திட்டம் அத்துடன், வேலணை பிரதேசத்துக்குள் செயற்படும் நுண்நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து எதிர்வரும் வாரமளவில் கலந்துரையாடல்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1. மீளச்செலுத்தக்கூடிய நிலைமையை அறிந்து கடன் வழங்குதல், 2. அளவுக்கு அதிகமான வட்டி வீதங்களைப் பேணாது இருந்தல், 3. பெண் தலைமைக் குடும்பங்களுக்கான கடனுதவிகளில் கூடுதலான சகிப்புத்தன்மையைப் பேணுதல், 4. கடன்களை வசூலிக்கும் நேரகாலங்களைப் பேணுதல் ஆகிய விடயங்களில் நுணிநிதி நிறுவனங்களை முறையான ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவரும் நோக்கில் இந்தக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.