இலங்கை
18 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளம்; கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் அவலக்குரல்.!
18 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளம்; கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் அவலக்குரல்.!
இலங்கை கனியமணல் கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை நிலையத்தில் பணியாற்றும் 83 ஊழியர்களுக்கு 18 மாதங்களாக வழங்கப்படாது இருக்கின்ற, நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி கூட்டுத்தாபனத்துக்கு முன்னால், கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதால்பலர் குடும்பச் செலவுகளையும், குழந்தைகளின் கல்வியையும் மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
குறித்த பிரச்சினையை தீர்க்கும் நோக்கில், பலமுறை நிறுவன மேலதிகாரிகளிடமும், தொழிலாளர் திணைக்களத்திடமும், சம்பந்தப்பட்ட அமைச்சகத்திலும் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவிதமான பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட, கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் சுணில் ஹந்துநெத்தி, இந்த மாதம் சம்பளம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த போதும், அது தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக நிர்வாகத்துடன் பேசியபோது நியமனத்தை நாள் சம்பள அடிப்படையில் மாற்றி நாளாந்த கூலி அடிப்படையில் வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தத் திட்டத்தை எதிர்ப்பு தெரிவித்தும், அடிப்படை சம்பள முறைமையில், சம்பளத்தை வழங்கக் கோரியும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தமக்கு சரியான தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் இதை தொடரவிருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.